அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தன்னை சசிகலா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுக் கொள்ளும் நிலையில், இன்று (டிசம்பர் 1) அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சட்ட விதிகள் திருத்தப்பட்டு சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டது.
அதாவது ஏற்கனவே பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் சட்ட விதி. ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் பன்னீரின் தர்மயுத்தத்தின் போது…. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்த சசிகலா கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்தார்.
சசிகலா சிறை சென்றபின் பாஜகவின் அழுத்தத்தால் எடப்பாடியும், பன்னீரும் ஒன்று சேர்ந்து தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கினார்கள். அப்போது அதிமுக ஆளுங்கட்சி என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் எடப்பாடி பக்கம் நின்றனர். தினகரன் பக்கம் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பன்னீர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து ஒருங்கிணைப்பாளராகி துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
அப்போது 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவி என்பதே நீக்கப்படுகிறது என்றும் அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தன்னை தொடர்ந்து அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
இந்நிலையில் இன்று கூடிய அதிமுக செயற்குழுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்குகள் மூலமாகவே தேர்ந்தெடுப்பார்கள்” என்று அதிமுகவின் சட்ட விதி 20 (அ) 2 திருத்தியமைக்கப்படுகிறது. இந்த விதியை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை என்றும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்மானம் வரும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும் என்றும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்தத் தீர்மானம் மூலம் அதிமுக தொடர்ந்து இரட்டைத் தலைமையின் கீழ்தான் இயங்கும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பொதுச் செயலாளர் என்ற பதவியை மீண்டும் உருவாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்பதும் இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரியவருகிறது. மேலும் முன்பு பொதுச் செயலாளர் பதவிக்கு இருந்த தேர்வு முறையையே இப்போது ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளருக்கு கொண்டுவந்திருப்பதன் மூலம் இரட்டைத் தலைமை தொடரும் என்றும் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது இத்தீர்மானம். ஆக ஓ.பன்னீரோ, எடப்பாடியோ இனி பொதுச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்த எந்த திட்டமும் இல்லை என்பதே இதன் மூலம் தெரிகிறது.
பொதுச் செயலாளர் பதவியை மையமாக வைத்து உரிமையியல் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் இந்த அதிமுக செயற்குழுவின் சிறப்புத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
**-வேந்தன்**
�,