தமிழக அரசின் 2,650 கோடி ரூபாய் டெண்டர் அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக 14ஆவது நிதி ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை ஊராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளித்து, ஊராட்சி அமைப்புகள் மூலமாகவே அடிப்படை பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மூலமாக திட்டங்களை தேர்ந்தெடுத்து, மாநிலம் முழுவதும் 2, 650 கோடி ரூபாய்க்கு மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.
இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், ஊராட்சி மன்றம், கிராம சபை ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு, தனி அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்பட உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு நேற்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஊராட்சி மன்றங்கள் அனுமதியின்றி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மூலமாக அனுமதிபெற்று விடப்பட்ட 2,650 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஊராட்சி நிதியில் ஊழல் திருவிளையாடல் நடத்தும் பழனிசாமி அரசுக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி” என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 14-ஆவது நிதிக்குழு நிதியிலான அனைத்துப் பணிகளையும், ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும். ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களை வைத்து இ-டெண்டர் விடும் முறையை அதிமுக அரசு இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,”