அதிமுகவினரும், திமுகவினரும் கூட்டணி அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டாவின் 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வார தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தண்ணீர் திறக்க 20 நாட்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக தூர்வாரும் பணியை மேற்கொள்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இன்று (மே 26) வெளியிட்ட அறிக்கையில், “தூர்வாரும் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் இந்தப் பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பணிகள் நடைபெறுவது போல காட்டுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தனர். அதன்பிறகும் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்ற தகவல்கள் வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் ஏனோ தானவென்று அரைகுறையாக தூர்வாரினால், மேட்டூர் அணையிலிருந்து வரும் நீர் காவிரியின் கடைமடைப் பகுதிகளை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலைப்படுவதாகத் தெரிவிக்கும் தினகரன், “நிலைமை இப்படியிருக்க ஊர் ஊருக்கு ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களும் கள்ளக் கூட்டணி அமைத்துக்கொண்டு சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஆட்சியாளர்கள் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களை குறைந்தபட்சம் 50 சதவிகித மானியத்தில் வழங்குவதற்கும், நாள்தோறும் மும்முனை மின்சாரத்தை குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் தினகரன்.
**எழில்**
�,