5 மாநிலத் தேர்தல்: தளர்வுகளை அறிவித்த தேர்தல் ஆணையம்!

Published On:

| By Balaji

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்த தேர்தல் ஆணையம் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத் துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.

இதன்பின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பொதுக் கூட்டம், பாத யாத்திரை, சைக்கிள் மற்றும் பைக் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.

முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 27ஆம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்தவெளியில் அதிகபட்சம் 500 பேர் அல்லது மைதானத்தின் கொள்ளளவில் 50 சதவிகிதம் அல்லது மாவட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கும் வரம்பு இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கூட்டங்களை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இரண்டாம்கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31ஆம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை, மேலே கூறப்பட்ட நிபந்தனைகள்படி கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்குப் பதிலாக, தற்போது 10 பேர் வரை வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது.

பிரச்சாரத்துக்கு வீடியோ வேன்களை திறந்தவெளியில் அதிகபட்சம் 500 பார்வையாளர்களுடன் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share