அமமுக மாவட்ட மண்டல மாநில பொறுப்பாளர்களை நேற்று இரவு அவசரமாகச் சென்னைக்கு அழைத்துள்ளார் டிடிவி தினகரன்!
இன்று ஜனவரி 17ஆம் தேதி, முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள். இதை ஒட்டி சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே இருக்கும் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள இப்பகுதியை உள்ளடக்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேப்பாக்கம் எல். ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசுத் தரப்பில் பொதுப்பணித்துறை எவ்வாறு அலங்காரம் செய்யுமோ அதேபோல அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். இதேபோல சென்னை சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்களையும் இந்நிகழ்வில் பங்கேற்க மாவட்டச் செயலாளர்கள் அழைப்பு விடுத்து அதற்கான மாஸ் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக அமமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சென்னைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் டிடிவி தினகரன், ராயப்பேட்டையில் இருக்கும் அமமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறார்.
அங்கே மாவட்டச் செயலாளர்களோடும், மண்டலப் பொறுப்பாளர்களோடும் ஆலோசனை நடத்துகிறார். இதுபற்றி அமமுக வட்டாரங்களில் பேசுகையில், “வரும் ஜனவரி 27ஆம் தேதி, சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையாகும் நாள் . இந்த நிலையில்தான் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்களையும் நேற்று ஜனவரி 16ஆம் தேதி இரவே சென்னைக்கு வரச்சொல்லிவிட்டார் தினகரன்.
சசிகலாவை வரவேற்பது தொடர்பான ஏற்பாடுகள், அது தொடர்பாக தமிழகம் முழுதும் சுவர் விளம்பரங்கள், மற்ற விளம்பரங்கள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தெல்லாம் இன்று கட்சி அலுவலகத்தில் ஆலோசித்து தினகரன் சில வழிகாட்டுதல்களைத் தெரிவிப்பார் என்று தெரிகிறது” என்கிறார்கள்.
**-வணங்காமுடி வேந்தன்**
�,