திமுக தலைவர் ஸ்டாலினுடைய பிறந்தநாள் இன்று (மார்ச் 1) அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவாலயத்தில் நெடுநேரம் வரிசையில் நின்று ஸ்டாலினை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அறிவாலயத்தில் செய்தியாளர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அவர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“ என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நேற்றிலிருந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் 7-ஆம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு மேற்கொண்டு இருக்கிறார்.
7-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான இலட்சியப் பிரகடனத்தை தமிழகத்திற்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலை நோக்குப் பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிடவிருக்கிறேன்.
அடுத்த 10 ஆண்டிற்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வரும் சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கையும் அதில் நான் வரையறுத்திருக்கிறேன்.
இதுவரை தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் அடிப்படையில் கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து அந்தத் தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 7 அன்று திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்தத் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடவிருக்கிறேன். தமிழகத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையினை, அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். அதை நமது கழக உடன்பிறப்புகள் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி, கிளைகள், வார்டுகள், கிராமங்கள் அளவில், பட்டிதொட்டிகள் தோறும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்”என்றார்.
ஏற்கனவே திருச்சியில் வரும் 14 ஆம் தேதி நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த கே.என் நேரு வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் கே.என். நேருவின் வருத்தத்தைப் போக்கும் வகையில் திருச்சியிலேயே இந்த தொலை நோக்குத் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்வை மாநாடு போல நடத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். நேற்று முதல் திருச்சி சிறுகனூர் பகுதியில் ஏற்கனவே மாநாட்டுக்காக தயாரான இடங்களில் மீண்டும் ஜரூர் ஏற்பாடுகள் நடக்கின்றன. வரும் 7 ஆம் தேதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் அதே மாநாட்டில் நடைபெறக் கூடும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
**-வேந்தன்**
�,