விவேக் பெயரில் சாலை: குமரிமுத்துவுக்கு?

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு ‘விவேக்’ சாலை எனப் பெயர் சூட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் 2021 ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு இன்று வரையிலும் வேறு எந்த நடிகரும் வரவில்லை.
இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, விவேக்கின் கனவுத் திட்டமான ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை விவேக் நண்பரும் நடிகருமான செல் முருகன் தொடங்கி வைத்தார். அதுபோன்று விவேக் குடும்பத்தின் சார்பில் முதல்வரைச் சந்தித்து, விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று விவேக் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்டி கவுரவித்துள்ளது தமிழக அரசு.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில், “திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம்வந்த சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.
அவரது நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 10, பகுதி 29, வாா்டு 128இல் அமைந்துள்ள பத்மாவதி நகா் பிரதான சாலையை அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்தனர்.
இதே கோரிக்கையைத் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் முதல்வர் இடத்திலும் வலியுறுத்தினார். இவ்வாறு பெயர் மாற்றம் செய்யச் சென்னை மாநகராட்சி மேயரும் ஒப்புதல் அளித்தார். இதற்கேற்ப உரிய பெயர் மாற்றத்தைச் செய்து அரசாணை வெளியிடுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்று, விவேக் நினைவாக, அவர் புகழைப் பறைசாற்றும் வகையில், அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு விவேக் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ள, தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன், “இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கடந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை சந்தித்திராத ஒன்று.
80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டியிருந்த சமயம் அது. விவேக் அப்போதுதான் அறிமுகமானார். நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் எனக்கு மிகச் சிறிய வேடம்தான். ஆனால் விவேக்குடன் வந்த அந்தக் காட்சி எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
விவேக்குடன் பின்னர் பெரிதாகப் பேசியது இல்லை. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய சில மாதங்களில் பேசத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் ரொம்பவே நெருங்கிப் போனோம். காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அழைப்பு வந்துவிடும். பேசுவோம். அந்த வானத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி அவருடன் பேசலாம். போனை எடுத்ததும் ஒலிக்கும் அந்த ‘பூச்சி சார்’ என்ற குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மறுநாள் காலை அழைப்பதாகச் சொன்ன விவேக்கிடம் இருந்து அழைப்புக்குப் பதிலாக அவரது மரணச் செய்திதான் வந்தது. என்னால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. எங்கேயோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருக்கிறார். சென்னை திரும்பியதும் அழைப்பார் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த 16ஆம் தேதி விவேக்கின் உதவியாளர் செல் முருகன் அழைத்து ‘நாளை சாரின் முதலாண்டு நினைவு நாள். அவரது நினைவாக அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை விவேக்’ஸ் கிரீன் கலாம் எனத் தொடங்க இருக்கிறோம்’ என்று அழைப்பு விடுத்தார். செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையைத் தீர்த்துக்கொள்கிறேன்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு, விவேக்குக்கு நெருக்கமான மிகச் சில நண்பர்களே வந்திருந்தனர். விவேக்கின் நண்பர்களும் அவரது சக நடிகர்களும் அங்கே தான் அந்த கோரிக்கையை வைத்தனர். விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று. பேசிக்கொண்டிருக்கும்போதே தகவல் வந்தது. தலைவர் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் என்று. அவசரம் அவசரமாக வந்து தலைவர் எதிரில் நின்றேன். கேட்காமலேயே சொன்னேன். நிகழ்ந்ததை. ’ஒரு வருஷம் ஆகிடுச்சா?’ என்றவர் முறையாக ஒரு கடிதம் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். அடுத்த சில நாட்களில் செல் முருகனும் விவேக் குடும்பத்தினரும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.
சரியாக 15ஆவது நாள் இன்று (நேற்று). விவேக் வசித்த தெருவுக்கே அவர் பெயரைச் சூட்டி அரசாணையே வெளியாகி விட்டது. அந்த அரசாணையில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் கலைஞனைக் கவுரவிக்க உடனடியாக ஆவன செய்த தமிழினத் தலைவருக்கு நன்றிகள்!
விவேக் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆத்ம நண்பனுக்குக் கிடைத்த கவுரவம் என்று மகிழ்வதா அவர் இல்லையே என்று கலங்குவதா என்று தெரியவில்லை. எங்கிருந்தோ ‘தேங்க்ஸ் சிஎம் சார்’ என்று சொல்வது மட்டும் கேட்டது. நீங்கள் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள் விவேக் சார்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பெயர் சாலைக்குச் சூட்டப்பட்ட நிலையில், நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுக்கும் திமுக அரசு இதுபோன்று மரியாதை செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர் குமரி முத்து. அவரது சிரிப்புக்கே தனி ரசிகர் பட்டாளம் இன்னும் உண்டு. நடிப்பு ஒருபக்கம் என்றால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு திராவிட கொள்கைப்பிடிப்புள்ள தொண்டராக இருந்தவர். திமுகவின் பிரச்சார மேடைகளில் தீவிரமாகப் பேசியவர்.
கலைமாமணி’, ’கலைச்செல்வம்’ உள்ளிட்ட விருதுக்குச் சொந்தக்காரர். இவர், 2016ஆம் ஆண்டு காலமானார். இவர் மறைந்து ஆறு வருடங்கள் ஆகும் நிலையில், விவேக்குக்கு வழங்கப்பட்ட மரியாதை போன்று குமரிமுத்துவுக்கும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
**-பிரியா**

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts