இந்தியாவின் 73ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று காலை ஆளுநர் ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மெரினா கடற்கரை காமராஜர் சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக் கொடியின் மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
குடியரசு தின விழாவில் முதல் முறையாக முதல்வராகப் பங்கேற்ற ஸ்டாலின், அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண் துறைக்கான சிறப்புப் பதக்கம், கோட்டை அமீர் விருது ஆகியவற்றை வழங்கினார்.
கொரோனா பரவல் காரணமாகக் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன அதே சமயத்தில், மத்திய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.
இதில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலின் மஞ்சள் பை எடுத்துச் செல்லும் வகையிலான அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.
அதுபோன்று வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள், பாரதியார், வஉசி வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், பெரியார், காயிதே மில்லத், ராஜாஜி காமராஜர் ரெட்டைமலை சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளும் அடுத்தடுத்து அணிவகுத்துச் சென்ற அலங்கார ஊர்திகளில் இடம்பெற்றிருந்தன.
கொரோனா பரவல் காரணமாக 30 நிமிடங்களில் குடியரசுதின விழா நிறைவு பெற்றது.
**-பிரியா**
�,”