ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் மோதல் தலைமையின் தலையீட்டுக்குப் பிறகும் ஓயவில்லை. இரண்டாவது முறையாக இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர்.
நேற்று (ஜூலை 13) ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் 106 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையில் பைலட் தலைமையில் 16 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காட்டும் வீடியோவை நேற்று இரவு பைலட் தரப்பினர் வெளியிட்டனர். பைலட்டின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் 10 விநாடி வீடியோ பகிரப்பட்டது. பைலட்டின் ஆதரவு அமைச்சரான சுற்றுலாத்துறை அமைச்சர் விஸ்வேந்திர சிங் “குடும்பம்” என்ற தலைப்பில் இந்த வீடியோவை ட்விட்டரிலும் வெளியிட்டார். அதாவது பைலட்டின் குடும்பத்தில் 16 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் சச்சின் பைலட்டை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே ஆகியோர் தொடர்புகொள்ள முயற்சித்தார்கள். ஜூலை 14 ஆம் தேதி நடக்கும் காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ள வேண்டுமென்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே டெல்லி காங்கிரஸ் தலைமையின் தூதுவர்களாக ஜெய்ப்பூர் வந்த ரந்தீப் சுர்ஜீவாலா, அஜய் மாக்கான், அவினாஷ் பாண்டே ஆகியோர் இன்று காலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் மீண்டும் சந்திப்பு நடத்தினார்கள். அப்போது பைலட் தரப்பின் கோரிக்கைகளை கேட்பதாக நாம் சொல்லியும் அவர்கள் நம் தொடர்புக்கே வரவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கெலாட்டோடு இருப்பதால் காங்கிரஸ் கெலாட் பின்னால்தான் இருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவெடுத்தனர். ஆனால் பைலட் உள்துறையைக் கேட்பதாகவும், அதை முதல்வர் அசோக் கெலாட் விட்டுக் கொடுக்க மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்தப் பின்னணியில் இன்று (ஜூலை 14) காலை 11 மணிக்கு ஜெய்ப்பூரில் இருக்கும் ஃபேர்மோண்ட் ஹோட்டலில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் இரண்டாவது கூட்டத்தையும் சச்சின் பைலட் உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். பைலட்டை சமாதானப்படுத்த கட்சியின் உயர்மட்ட தலைமை எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள் பைலட் ஆதரவாளர்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில், “ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்தே செவி சாய்க்காத சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என்று 102 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. சச்சின் பைலட் ஹரியானாவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனையில் இருக்கிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானின் நடப்பு நிலை பற்றி விவாதிக்க பாஜக கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்துள்ளது
**-வேந்தன்**�,