தமிழ்நாட்டு அரசியலில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் சலசலப்புகளையும் புயலையும் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில்… அவரது மகனான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது பெயரை அதிகாரபூர்வமாக மாற்றியிருக்கிறார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேனி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியல் உலகில் பரவலாக அறியப்பட்டார். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்ற நிலையில்…தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார் ரவீந்திரநாத் குமார்,
இந்த நிலையில்தான் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரையிலான மத்திய அரசின் கெசட்டில் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மாற்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், “பெரியகுளம், தென்கரை வடக்கு அக்ரஹாரத்தில் வசிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான பி. ரவீந்திரநாத் குமார் ஆகிய நான், என் பெயரை மாற்றியிருக்கிறேன். அதன்படி இனி நான், ‘பி. ரவீந்திரநாத்’ என்று அழைக்கப்படுவேன்”என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திடீரென இந்த பெயர் மாற்றம் ஏன் என்று ரவீந்திரநாத்துக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.
“ரவீந்திர நாத் குமார் (Raveendranath kumar) என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால் தேனி அரசியல் வட்டாரத்திலும் சரி, சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி ரவீந்திரநாத் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் ரவீந்திரநாத் ஒரு நியூமராலஜி நிபுணரிடம் ஆலோசித்தபோது, ‘ஒருவரது பதிவுப் பெயரும் அழைக்கப்படும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் அந்த பாசிட்டிவ் அதிர்வுகள் மாற்றத்தை உண்டாக்கும். மேலும் உங்கள் பெயரில் குமார் என்ற வார்த்தை தொக்கி நிற்கிறது. அதுவும் உங்களது முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது. எனவே தென்னிந்தியா, வட இந்தியா என எங்கும் புகழ் பெற ரவீந்திரநாத் என்ற ஒற்றைப் பெயரே போதும் என்று சொல்லியிருக்கிறார். மேலும் பெயரில் சில எழுத்துகளையும் (Ravindhranath) குறைத்திருக்கிறார்.
ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவிக்காக பல வகைகளிலும் முயற்சி செய்து வரும் ரவீந்திரநாத் இப்போது பெயரை மாற்றியதன் மூலம் எளிதில் வட இந்தியாவில் உச்சரிக்கப்படும் பெயராக தன் பெயர் ஆகும் என்று நம்புகிறார். 2021 ஜனவரிக்குள் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆனாலும் ஆச்சரியமில்லை” என்கிறார்கள்.
எம்பியாகி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ஒருபக்கம் என்றால், பெயரில் இருந்து ஒரு பகுதியை எடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார் ரவீந்திரநாத். இந்த பெயர் மாற்றம் அவரை மத்திய அமைச்சர் ஆக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
**ஆரா**
�,”