இதுவே சரியான தருணம்: அழைப்பு விடுக்கும் பிரதமர்!

politics

இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா வர்த்தக கவுன்சில் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்தியா ஐடியாஸ் என்ற உச்சி மாநாடு நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. எதிர்காலத்தை கட்டமைத்தல் என்பதை மையப்பொருளாகக் கொண்டு மாநாடு நடைபெற்றது.

காணொலி காட்சி வாயிலாக உச்சி மாநாட்டில் ‘இந்தியாவில் முதலீடு செய்ய, இதுவே சரியான நேரம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகத்துக்கு சிறந்த எதிர்காலம் தேவை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். மேலும், நாம் அனைவரும் கூட்டாக, எதிர்காலத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்திற்கான நமது அணுகுமுறை மனித குலத்தை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 6 வருடங்களாக சீர்திருத்தங்கள் நிறைந்தததாக இந்திய பொருளாதாரத்தை மாற்றி உள்ளோம். போட்டிகள் நிறைந்ததாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக, டிஜிட்டல் மயமாக, புதிய கண்டுபிடிப்புகள் நிறைந்ததாக மற்றும் கொள்கை நிலைப்புத்தன்மை உடையதாக சந்தையை மாற்ற சீர்திருத்தங்கள் உதவியுள்ளன” என்று தெரிவித்தார்.

வலுவான உள்நாட்டு பொருளாதார திறன்களால், உலகளாவிய பொருளாதார ஆற்றலை அடைய முடியும் என்ற பிரதமர், “தற்சார்பு இந்தியா என்ற தெளிவான அழைப்பின் மூலம் ஒரு வளமான மற்றும் ஆற்றல்மிக்க உலகத்திற்கு இந்தியா தனது பங்களிப்பை அளிக்கிறது. அதற்காக, உங்கள் கூட்டுறவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்: இன்று, இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை உள்ளது. ஏனென்றால், வெளிப்படைத் தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் சரியான கலவையை இந்தியா வழங்குகிறது. மக்களிடமும், ஆட்சியிலும் இந்தியா வெளிப்படை தன்மையைக் கொண்டாடுகிறது” எனவும் கூறினார்.

“வாய்ப்புகள் அளிக்கும் இடமாக இந்தியா உருவாகி வருகிறது. சமீபத்தில், ஒரு சுவாரஸ்ய தகவல் இந்தியாவில் வெளியானது. நகரங்களில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களைவிட, கிராமங்களில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது என அந்த தகவல் கூறியது: தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகளில், 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்-செயின் மற்றும் இன்டர்நெட் விஷயங்கள் ஆகியவற்றின் முன்னணி தொழில்நுட்பங்களின் வாய்ப்புகளும் அடங்கியுள்ளன.

இந்திய – அமெரிக்க இருதரப்பு உறவு கடந்த காலங்களில் பல தருணங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. இப்போது நமது கூட்டு முயற்சி தொற்று நோய் பரவல் நிலையிலிருந்து உலக நாடுகள் விரைவில் மீண்டெழும் வகையில் அத்தியாவசியம் மிகுந்ததாக இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை, எரிசக்தி, உட்கட்டமைப்பு, விண்வெளி, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, நிதி மற்றும் காப்பீடு துறைகளில் முதலீடுகளை செய்ய அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, “வலுவான உள்நாட்டு பொருளாதார திறன்களால், உலகளாவிய பொருளாதார ஆற்றலை உருவாக்க முடியும். இதை, தற்சார்பு இந்தியாவை நோக்கி செயல்படுவதன் மூலம், இந்தியா செய்கிறது. இந்தியாவின் எழுச்சி என்பது நீங்கள் நம்பக்கூடிய ஒரு தேசத்துடனான வர்த்தக வாய்ப்புகளின் அதிகரிப்பு, திறந்த வெளிப்பாட்டுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பின் அதிகரிப்பு, உயர்வை அளிக்கும் சந்தையை அணுகுவதன் மூலம் உங்கள் போட்டித் தன்மையின் அதிகரிப்பே ஆகும்” என்றும் உரையாற்றினார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.