பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ஆவினில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதே சமயத்தில் அமைச்சராக 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பாக்ஸை ராஜேந்திர பாலாஜி திருடிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அதில், சாத்தூரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறேன். எனது அக்கா மகனுக்கு விருதுநகரில் உள்ள ஆவின் கிளையின் மேலாளர் வேலையை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் 30 லட்சம் ரூபாய் பெற்றார்.
அந்த பணத்தை ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த விஜய நல்லதம்பி என்பவரிடம் அளித்ததாகவும், அவர் அமைச்சரிடம் கொடுத்ததாகவும் மாரியப்பன் என்னிடம் தெரிவித்தார். எனவே 30 லட்சம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன், விஜய் நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோன்று விஜய் நல்லதம்பி தனியாக ஒரு புகார் அளித்தார். அதில், ஆவின் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணி வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராம், முத்துப்பாண்டி ஆகியோர் 1.50 கோடி பெற்றனர்.
இது தவிர முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வழியே கோவில்பட்டி நிகழ்ச்சிக்கு வந்த போது 5,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் பெரிய நிகழ்ச்சியை நடத்தினால் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கித்தருகிறேன் என ராஜேந்திர பாலாஜி கூறியதால் 1.50 கோடி செலவழித்தேன் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலராமன், பாபுராம் முத்துப்பாண்டி ஆகியோர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், புகார்கள் அளிக்கப்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுபோன்று முன்னதாக அதிமுகவிலிருந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது டிஜிபி அலுவலகத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி 6 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக வாணியம்பாடியை சேர்ந்த பிரகாசம் என்பவர் புகார் அளித்தார். ஆனால், இதற்கு நிலோபர் கபில் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதுபோன்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஓமலூர் அருகே பூசாரி பட்டியைச் சேர்ந்த மணி என்பவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார். இவர் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்குப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் செல்வகுமார் என்பவர் மூலம் ரூ.17 லட்சம் பெற்று ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் மணி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,