நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் தலைவர்கள் நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்க…. திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேரடியாக பரப்புரையில் இறங்காமல் நேற்று முதல் காணொளி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நேற்று பிப்ரவரி 6 மின்னம்பலத்தில் ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் ஏன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்தியில் திமுக நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தையும் கூட்டணி கட்சிகளின் எண்ண ஓட்டத்தையும் குறிப்பிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் தான் ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது கட்சியினருக்கு இன்று எழுதிய மடலில் பதிலளித்துள்ளார்.
அந்த மடலில்,
“நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும்.
கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.
வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள்.
அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பது போல் காத்த நமது அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.
கழகத்தினர் தெருமுனைக் கூட்டங்களை நடத்தினால் பொதுக்கூட்டம் போலவும், பொதுக்கூட்டங்களை நடத்தினால் மாநாடு போலவும், உடன்பிறப்புகள் திரள்வதுடன், பொதுமக்களும் பெருமளவில் உற்சாகத்துடன் நம்முடைய கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இளைஞர்களும், பெண்களும் கழகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவைக் கடந்த பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கேற்றால், அது கொரோனா காலக் கட்டுப்பாடுகளுக்கு மாறானதாக அமைந்துவிடும்.
எந்தவொரு ஆக்கப்பூர்வமான – பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.
விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த மடலில் மேலும் அவர், “சட்டமன்றத் தேர்தலின்போது, ‘தமிழகம் மீட்போம்’ எனத் தொடர்ச்சியாகக் காணொலிக் கூட்டங்களை நடத்தியபோது, ஒவ்வொரு மாவட்டத்திற்கான கூட்டத்திலும் அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் மட்டுமின்றி, நகரக் கழக அலுவலகங்கள், ஒன்றியக் கழக அலுவலகங்கள், பேரூர்க் கழகங்கள், கிளைக் கழகங்கள் எனப் பல ஊர்களின் உடன்பிறப்புகளும் அவரவருக்கு வசதியான இடத்தில் ஒன்றுகூடி, காணொலிக் கூட்டத்தை கண்டும் கேட்டும் ஊக்கமடைந்தனர்.
நேரடிப் பரப்புரைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட காணொலிப் பரப்புரைகளால், தமிழகத்தைக் கழகம் மீட்டது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறது.
‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில், பிப்ரவரி 6-ஆம் நாள் தொடங்கிய காணொலிக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் பிப்ரவரி 17 வரை தொடர்கிறது. கழகத்தினரையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும், காணொலி வழியே கண்டு, களிப்புமிகக் கொண்டு, உரையாடிடும் உற்ற வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன்.
பொதுக்கூட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கூடக்கூடாது என்கிற மாநில தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையைப் பின்பற்றி, பிப்ரவரி 6-ஆம் நாள் கோவை மாவட்டத்திற்கான காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது கூட்டமல்ல, கழகத்தின் ‘மெய்நிகர் மாநாடு’.
கோவைக்குப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி யின் வியூகமும் வேகமும் மிகுந்த விரிவான முயற்சியாலும், கோவை மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகளின் உத்வேக உழைப்புடன் கூடிய ஒத்துழைப்பாலும், 300 இடங்களில் இந்தக் காணொலிக் கூட்டத்தில் கழகத்தினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பேருக்குக் குறையாமல் கூடியிருந்ததால், ஒரு காணொலி பரப்புரைக் கூட்டத்தின் வாயிலாக ஏறத்தாழ 3 இலட்சம் பேருடன் உரையாடுகின்ற நிறைவான வாய்ப்பு அமைந்தது. நேரடியாகக் களத்திற்கு வந்தாலும்கூட, இத்தனை பேரை ஒன்றாகச் சந்தித்திருக்க முடியாது. இத்தனை பேரும் அவரவர் இடத்திலிருந்து பரப்புரைக் கூட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வந்திருக்க முடியாது. இந்தக் கொரோனா காலக் கட்டுப்பாடு எனும் தடைகளைக் கொஞ்சமும் மீறாமல், உணர்வுமிகு தடந்தோள் உயர்த்தி நம் பரப்புரைப் பயணம் தமிழ்நாடெங்கும் தொடர்கிறது.
காணொலியில் முன்வைக்கும் கருத்துகளை அவரவர் வார்டுகளிலும், வீடு வீடாகச் சென்று, விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரியுங்கள்.
பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்! அதனையும் கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலிப் பரப்புரைகளில் பங்கேற்கிறேன்” என்று தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
**வேந்தன்**