9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து பதவிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
மாலை நிலவரப்படி, தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருந்து பெறப்பட்ட முடிவுகள்
**மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு**
153 பதவிகளுக்கு 99 இடங்களுக்கு முடிவுகள் வெளி வந்துள்ளன.
இதில் அ.இ.அ.தி.மு.க -1, தி.மு.க – 91, காங்கிரஸ் – 6, மற்றவை-1
**ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு**
1421 பதவிகளுக்கு 1160க்கு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதில், அ.இ.அ.தி.மு.க- 172, தி.மு.க -790, காங்கிரஸ் – 30, பாஜக- 8, சி.பி.ஐ-3, சி.பி.ஐ(எம்)- 4, தே.மு.தி.க- 1, மற்றவை -152.
3007 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2539க்கு முடிவுகள் வந்துள்ளன.
23211 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 16183க்கு முடிவுகள் வந்துள்ளன.
திமுக வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள நிலையில், இது புறவாசல் வழியாக வந்த வெற்றி என அதிமுக விமர்சித்துள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது. இதில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. அரசு, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தபோதிலும் அதை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வன்முறைக் களியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க. அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் நடத்தியிருக்கக்கூடிய தேர்தல் விதிமீறல்களையும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது.
**கள்ளக்குறிச்சி **
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், நான்கு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு 25.9.2021 அன்று கொண்டு சென்றோம். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
**ராணிப்பேட்டை**
கடந்த 4.10.2021 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கர பாண்டியன், அப்பட்டமான ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய விதத்திலே எந்தவிதமான சுற்றறிக்கையும் அனுப்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து தி.மு.க-வின் வேட்பாளர்களின் பட்டியலைப் பெற்று, வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்.
அந்தத் தகவலை அறிந்த கழகம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து புகார் மனுவாகவும் கொடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த இடத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்று சொன்னால் குறைந்தபட்சமாக தேர்தல் பணியில் இருந்தாவது அவர் விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்தோம். அந்தப் புகார் மனு மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
**நாமக்கல் **
நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், வார்டு எண். 6-ல் நடைபெற்ற தற்செயல் தேர்தலில் தமிழக அரசின் சின்னம் பதித்த தி.மு.க. தலைவர்களின் படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடத்திலே கொடுத்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அதன்மூலம் மாதம் 5,000/ ரூபாயும், விபத்துக் காப்பீடாக 1 லட்சமும் கிடைக்கும் என்று மக்களை திசை திருப்பி வாக்கு சேகரிப்பு நடைபெறுகிறது என்று புகார் மனு கொடுத்திருந்தோம். அந்தப் புகார் மனு மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
**திருப்பத்தூர்**
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 10.10.2021 அன்று திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை பாதுகாக்கப்பட்ட அறையில் திருப்பத்தூரைச் சேர்ந்த தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துமீறி உள் நுழைந்து வாக்குப் பெட்டிகளை சேதப்படுத்தி மூடி முத்திரையிடப்பட்ட பூட்டுகளை உடைத்து மதம் ஏறிய யானைகளாக செயல்பட்ட காணொளிக் காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அச்சம்பவத்தின் அடிப்படையில் கழகம் அளித்த புகாரின் பேரில் தி.மு.க-வினரை நம்பி ஏமாந்த தேர்தல் அலுவலர்களும், காவலர்களும் சம்பவம் பூதாகரமாக ஆகிவிட்டதினால் வேறு வழியில்லாமல், எப்படியும் மூடி மறைக்க முடியாது என்பதனால் தேர்தல் ஆணையத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக தொடர்ந்து வெற்றிபெறக் கூடிய உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள கழக உடன்பிறப்புகளை காவல்துறையின் வாயிலாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து அவர்களை தேர்தல் பணியாற்றவிடாமல் முடக்க வேண்டும் என்பதற்காக 9 மாவட்டங்களில் பல்வேறு கழக உடன்பிறப்புகளின் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 விதியின் கீழ் பல இன்னல்களை தி.மு.க. அரசின் ஏவல் துறையான காவல்துறை முன்னெடுத்தது. அதை நிரூபிக்கின்ற விதமாக அதிமுக உயர் நீதிமன்றத்தை நாடி பல கழக உடன்பிறப்புகளுக்கு முன் பிணை பெற்ற பிறகும் காவல்துறை தன்னுடைய கோரப் பற்களால் சட்டத்தின் குரல்வளையை நெறித்து ரத்தம் உறிஞ்சும் மாமிச உண்ணிகளாக மாறியிருப்பது உள்ளபடியே மிகுந்த மன வேதனை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற சட்ட விதிமீறல்களையும், ஜனநாயக படுகொலையையும் முன்கூட்டியே அறிந்த அதிமுக, கடந்த 7.10.2021 அன்று தேர்தல் ஆணையத்திடம், விரிவாகவும், தெளிவாகவும், வாக்கு எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக்கூடாது. வெற்றி பெற்றவர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஆளும் தி.மு.க-வின் நிர்வாகிகளை வாக்கும் எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் என்ன கேட்பது என்பதை போல நம்முடைய கோரிக்கைகளுக்கு நேரெதிராக ஆளும் தி.மு.க. அரசும், தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.
வாக்கு எண்ணும் நாளன்று காலை முதலே பல்வேறு அராஜக நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகுதான் தொடங்கி இருக்கிறது. அதற்கான உத்தரவைப் பெற யாருக்காக காத்திருந்தார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் தெரியும்.
அதிமுக முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் 4-ஆவது தூணான பத்திரிகையாளர் களே பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஊடகத் துறையினராலும், பத்திரிகைத் துறையினராலும் நடந்து முடிந்தது.
மக்களையும், வாக்காளர்களையும் ஊடகத் துறையையும், பத்திரிகைத் துறையையும் துச்சமென மதிக்கும் தி.மு.க. அரசு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவும், மக்களிடத்திலே செல்வாக்கு இருக்கிறது என்பதை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவும் இந்தத் தேர்தலில் பல வன்முறைகளை கட்டவிழ்த்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே முனைப்போடு சட்டத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தல்களில் வெற்றிகளை பெற்றிருக்கிறது.
அதுமட்டுமின்றி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். பல இடங்களில் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். இது போன்ற ஜனநாயகப் படுகொலை தி.மு.க. நடத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்த கழகம், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.எம். பாபு முருகவேல் மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்திலே வழங்கி இருக்கிறோம்.
அந்தப் புகார் மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டும் பெற்றிருக்கிறோம். ஏற்கெனவே கழகம் தாக்கல் செய்த வழக்கில் மீண்டும் இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதைக் கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
**-பிரியா**
�,