சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘ஊழல் தடுப்பூசிக்குத் தயாராகிவிடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி பங்கீடு, நேர்காணல் என கட்சிகள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளில் மும்மரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் கொரோனா காலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுதவிர 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நேற்று முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதேபோல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். டெல்லியில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிகார், ஒடிஷா மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் தயாராகிவிடுங்கள்” என்று தேர்தலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
**-பிரியா**
�,