டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் சுமார் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்மூலம் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5,667 ஆகக் குறைந்தது.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுவதற்குப் பதிலாக அதிகரித்துக்கொண்டே வந்தன. ஜனவரி மாத நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமுள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5197 ஆக இருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய சிபிஎம் செயலாளர் கருப்பையா, டாஸ்மாக் கடை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “அறந்தாங்கி அடுத்த அரசர்குளம் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. இந்தக் கடையை அறந்தாங்கி – காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. அத்துடன், பள்ளிகள், கோயில்கள் அருகே இருக்கின்றன. ஆகவே, பொதுமக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு நேற்று (அக்டோபர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினர்.
அதன்படி 2016 முதல் 2019 வரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “தமிழகத்தில் தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளால் எவ்வளவு வருமானம் வந்தது?” என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.
**எழில்**�,