கனமழை: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

Published On:

| By Balaji

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாகக் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் 108.30 அடியாக இருந்தது. ஆனால் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக நேற்று அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்தது. அதுபோன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 142.90/156 அடியாக உயர்ந்துள்ளது.

118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது.

அதுபோன்று தென்காசி மாவட்டத்திலுள்ள ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைகள் நிரம்பி வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. களியல் உள்ளிட்ட குமரி மலை கிராமங்களில் மழை வெள்ளம் காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக, களியல், பேச்சிப்பாறை, மழபாடி தீக்குறிச்சி, மங்காடு சிதறால் உள்பட 23 கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மழை அதிகமாகப் பெய்து வரும் நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேற்று முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

16.10.2021 அன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதீத கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்துள்ளது.

இந்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 குடிசைகள் பகுதியாகவும், 3 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2 நபர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நிவாரண மையங்களில் 116 குடும்பங்களைச் சேர்ந்த 337 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், திருகுருங்குடி மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு வழிபடச் சென்ற 500 பக்தர்கள், மலைப்பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து, கோயிலிலிருந்து வர இயலாத நிலையில், வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உதவியுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில், 17.10.2021 முதல் 20.10.2021 வரை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழை சேதங்கள் குறித்து தகவல் அறிந்த முதல்வர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அடுத்துவரும் மழைக் காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, அம்முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் அறிவுரை வழங்கினார்.

முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share