நடிகர் ரஜினிகாந்த் வரும் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தால்…. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ, இந்த சட்டமன்றத் தேர்தலின் போக்கை மாற்றிவிடுவார் என்ற கருத்து இப்போது அரசியல் வட்டாரங்களில் பலமாக நம்பப்படுகிறது.
இரு கழகங்களின் பலத்தைப் பற்றியும் அவற்றை எதிர்த்து களமாடுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது பற்றியும் ரஜினி சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாகவே பேசினார். மாற்று அரசியல் குறித்து ரஜினி குறிப்பிட்டபோதுதான் திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி பலம் பற்றிக் குறிப்பிட்டார்.
கொரோனா ஊரடங்கால் ரஜினியின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் மாறிப்போய்விட்ட நிலையில், அண்ணாத்தே ஷூட்டிங்கை முடித்துவிட்டு அரசியல் என்பதில் ரஜினியின் எண்ணம் இப்போது இருக்கிறது. இதற்கிடையில் கட்சி தொடங்குவதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்துக்கென ஒரு வழிகாட்டும் குழுவை அமைக்கலாம். அவர்கள் ஒவ்வொரு மண்டலமாக மக்கள் மன்றப் பணிகளை களத்தில் ஒருங்கிணைக்கலாம். தொற்றுப் பரவல் பற்றிய அச்சம் மறையும் வரை ரஜினி ஆன்லைனிலேயே மக்களையும் மன்ற நிர்வாகிகளையும் சந்திக்கலாம். அந்த வகையில் சில மாதங்களுக்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஆன்லைனில் சந்திக்க முடியும்” என்றும் ரஜினியிடம் அவரது ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு வழக்கம்போல் ஒரு புன்னகை பூத்திருக்கிறார் ரஜினி.
இதற்கிடையே ரஜினி வரும் பிப்ரவரி மாதம் அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதாக வரும் தகவல்கள் தமிழகத்தின் பிரதான கட்சிகளை யோசிக்க வைத்திருக்கின்றன. திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி பற்றி ரஜினியே வெளிப்படையாகக் குறிப்பிட்ட நிலையில் அந்த இரு கட்சிகளும் ரஜினியின் அரசியல் என்ட்ரியை (GAME CHANGING FACTOR) ஆட்டத்தை மாற்றும் காரணியாக கருதுகிறார்கள். அதாவது ரஜினி பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்து ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தலை சந்திப்பதால் அவர் ஆட்சியைப் பிடித்துவிடப் போவது கிடையாது.
ஆனால் ரஜினி கலந்துகொள்ளாத தேர்தலுக்கும், ரஜினி கலந்துகொள்ளும் தேர்தலுக்கும் இடையே சர்வ நிச்சயமான வேறுபாடு இருக்கும் என்பதே இரு கழகங்களின் கணிப்பு. தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இப்போது திமுகதான் மிகக் கடுமையான சவால். எல்லாவகையிலும் முயற்சி செய்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். ஒருவேளை ரஜினி தேர்தல் களத்தில் குதித்தால் எடப்பாடியின் சவால் பல மடங்கு அதிகரிக்கும். ஏனென்றால் ஆன்மிக அரசியல் என்ற முழக்கத்தை முன் வைக்கும் ரஜினி திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பெரிய அளவில் வாங்குவார். அதில் அதிமுக ஓட்டுகளும் அடங்கும் என்பதால் எடப்பாடிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதுகிறார் எடப்பாடி.
ஏற்கனவே ரஜினியோடு அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருவதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். ரஜினியின் சில கருத்துகளை பாராட்டியும் வாழ்த்தியும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருதுகிறார் எடப்பாடி. இதுகுறித்து ரஜினிக்கும் அவர் சிலர் மூலம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எடப்பாடியின் நிலை இப்படியென்றால் ரஜினியின் என்ட்ரி திமுக தலைவர் ஸ்டாலினையும் கடுமையாகவே பாதிக்கும் என்று ஸ்டாலினை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. திமுகவுக்கு பிரகாசமான வெற்றி இருப்பதாக தேர்தல் ஆய்வுகள் சொல்லி வரும் நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலின் முகம் ஸ்டாலினை மையமாக வைத்து என்பதை விட ரஜினியை மையமாக வைத்து என்று மாறிவிடும். ரஜினிக்கு ஒரு முறை வாக்களித்துப் பார்த்தால் என்ன ஆகும் என்று எந்தக் கட்சியும் சாராதவர்கள் முடிவெடுத்துவிட்டால் அது ஸ்டாலினுக்கு பேரிழப்பாகிவிடும். அதுமட்டுமல்ல ரஜினி வெற்றிபெற முடியவில்லை என்றால் கூட அவர் மூலம் வாக்குகள் சிதறுவது என்பது ஸ்டாலினுக்கே மைனஸ் ஆகும் என்பது அவர்களின் கணிப்பு.
இந்த நிலையில்தான் ரஜினிக்கும் ஸ்டாலினுக்குமான ஒரு பொதுவான நண்பர் மூலம் ரஜினியோடு ஸ்டாலின் தரப்பு பேசி வருவதாக தகவல். அமெரிக்காவை சேர்ந்த அந்த பிசினஸ் மேன் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது ரஜினிக்கு பல உதவிகளைச் செய்தவர். அவர் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். இந்த நண்பர்தான் தற்போது ஸ்டாலினின் மெசேஜை ரஜினியிடம் பாஸ் செய்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் ரஜ்னியோடு நட்புறவு கொண்டு அவரை இந்த தேர்தலுக்கு வர விடாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றால்… பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா வரும் தேர்தலில் ரஜினி கண்டிப்பாக களமிறங்கியே ஆக வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறார். ரஜினியை களமிறக்குவதன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் திமுக-அதிமுக என்ற இருமுனை போக்கை மாற்றலாம் என்பது அவரது நம்பிக்கை. அவர் ரஜினியோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ரஜினி களமிறங்கினால் தேர்தலின் போக்கு மாறும் என்று மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் தரப்பு ரஜினியை இரு வேறு விருப்பத்தோடு நட்பு அடிப்படையில் அணுகி வருகிறார்கள். ரஜினி என்ன செய்வாரோ?
**-வேந்தன்**�,