தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. முழு ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்ததால், வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் கடந்த சில ஞாயிற்றுக் கிழமைகளில் சாலைகளில் இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு முழு ஊரடங்கை காவல் துறையினர் கடுமையாக அமல்படுத்தினர். இந்த நிலையில் முழு ஊரடங்கை மீறும் வகையில் கடந்த 12ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளின் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில், அதிமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம்…”தற்போதிருக்கும் கட்டிடம் கட்டி 32 வருடங்கள் ஆகிவிட்டதால் பழுதடைந்து காணப்படுகிறது. உளுந்தூர்பேட்டை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு இருப்பதால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு 1.80 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது
டெண்டர் விடப்பட்டு வேலையைத் துவங்கத் திட்டமிட்டோம். ஞாயிற்றுக் கிழமை நல்ல நாள் என்பதால் முழு ஊரடங்கு உத்தரவு எனத் தெரிந்தும் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினோம். ஆனால், அதிமுகவினர் அவர்களாகவே குவிந்துவிட்டனர்” என்று விளக்கினார்.
ஊரடங்கு உத்தரவைப் போடும் ஆட்சியாளர்களே, ஊரடங்கை மீறலாமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
**காசி, எழில்**�,