யெஸ் வங்கி ராணா கபூருக்குச் சொந்தமான ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தனியார் வங்கிகள் பட்டியலில் முன்னணியில் உள்ள யெஸ் வங்கிக்கு, வாராக்கடன்கள் பெருகியதைத் தொடர்ந்து, மூலதன நெருக்கடியில் சிக்கியது. இதனால் யெஸ் வங்கி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. மேலும், வங்கிக் கணக்கிலிருந்து 50,000 மேல் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ராணா கபூர், DHFL நிறுவனத்துக்கு யெஸ் வங்கியின் மூலம் 3,700 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, அந்நிறுவனத்திடம் இருந்து 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அவருக்கு நாளை வரை அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணா கபூர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மும்பையில் ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (மார்ச் 9) காலை முதல் சோதனை மேற்கொண்டனர். DHFL அலுவலகம், டூயிட் அர்பன் வென்சர்ஸ், ராணா கபூர், அவரது மகள்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மேலும் ராணா கபூர், குடும்பத்தினர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ராணா கபூர், மனைவி பிந்து, மகள்கள் ரோஷிணி, ராஹீ ராதா ஆகியோர் வெளிநாடு செல்வதைத் தடுக்க இந்த லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-எழில்**�,