எடப்பாடி பழனிசாமியை மையமாகக் கொண்டுதான் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய பேச்சு அதிமுகவில் மீண்டும் வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.’
ஜூலை 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அமைச்சரவை முடிவுகளுக்குப் பின் அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் முதல்வர் எடப்பாடி. அப்போது தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை கேட்கும் சமூகத்தினருக்கு ஆதரவாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினார்கள். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறுக்கிட்டு, ‘அந்தப் பெயரை மாத்தினா சிக்கலாயிடும்ணே… ரொம்ப சாதிக்காரங்க இதை எதிர்க்குறாங்க’ என்று சொல்ல, ஓபிஎஸ் குறுக்கிட்டு, ‘தம்பி… அமைதியா இருங்க. உங்களால ஏகப்பட்ட பிரச்சினைங்க வந்துகிட்டிருக்கு’ என்று சொல்லி அவரை அமரவைத்தார். ஓபிஎஸ் மேலும் சில சொற்களையும் ராஜேந்திர பாலாஜி மீது வீசியிருக்கிறார். இதுபற்றி ஜூலை 15 ஆம் தேதி மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணையில், [‘தெற்கு – மேற்கு! அமைச்சரவையில் எதிரொலித்த ‘வேளாளர்’ விவகாரம்!](https://minnambalam.com/politics/2020/07/15/17/tamilnadu-cabinet-meeting-unofficial-consult-about-velalar-general-name) என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
இந்நிலையில் ஒரு நாள் கழித்து ஜூலை 16 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிதான் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடியாரே மீண்டும் முதலமைச்சராக வருவார்” என்று சொல்ல, குறுக்கிட்ட ஒரு செய்தியாளர், “2021 சட்டமன்றத் தேர்தலில்…’ என்று கேட்கும்போதே குறுக்கிட்ட ராஜேந்திர பாலாஜி, ‘2021 லதான் சொல்றேன் நானு” என்றார் மீண்டும்.
விடாத செய்தியாளர், “2021 இல் முதல்வர் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தலை சந்திக்குமா?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, “தலைவரே நான் வந்து வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசுற ஆளு. உள்ள ஒண்ணும் வெளிய ஒண்ணு நம்மக்கிட்ட கிடையாது. எடப்பாடியார்தான் இந்த ஆட்சியின் தலைவர். எட்டரை கோடி தமிழ் மக்களை நல்வழிப்படுத்தும் முதல்வர் எடப்பாடி. அவரை மையப்படுத்திதான் எங்களுடைய அரசியல் வியூகம் இருக்கும்” என்று வெளிப்படையாக போட்டு உடைத்தார்.
ஆக எடப்பாடி பழனிசாமியை மையப்படுத்தியே 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வியூகம் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜியே சொல்லிவிட்ட நிலையில் இந்த பிரஸ்மீட் வீடியோ நேற்றே ஓ.பன்னீர் வசம் கொடுக்கப்பட்டுவிட்டது. அவரும் இதைப் பார்த்திருக்கிறார். அதேநேரம் அதிமுக ஐடி விங் வாட்ஸ் அப் குரூப்புகளில் ஓ.பன்னீர் தரப்பினர் இதுபற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
“மாண்புமிகு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களே கட்சியில் பிரிவினையை உண்டு பண்ண வேண்டாம். முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு நீங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அல்ல. உங்கள் தொகுதிக்கு அதிக நிதி தேவை என்றாலோ அல்லது உங்கள் மாவட்டத்தில் பொறுப்பாளர் பதவியில் இருக்கும் நீங்கள், மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்றால் அது தனிப்பட்ட முறையில் கேட்டு வாங்கிக் கொள்ளவும். யார் தூண்டுதலின்பேரில் பேசுகிறீர்களா? கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளரும், தொண்டர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர் யாரென்று உங்களுக்கும் தெரியும். எனக்குப் பின்னாலும் 1000 ஆண்டுகள் கழகம் இருக்கும் என்று அம்மா சொன்ன ஒரு சொல்லுக்காக அனைத்து தியாகங்களையும் செய்துகொண்டு கழகத்தின் காவலராக ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் தான் முடிவு செய்ய வேண்டும். கழக பொதுக்குழுவும் , சட்டமன்ற உறுப்பினர்களும் , ஒருங்கிணைப்பாளர்களும் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவை தன்னிச்சையாக முடிவுகட்டி பேட்டி குடுத்த கேடிஆரை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கருத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்கு புகாராக அனுப்பி வைக்கிறோம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதிமுக ஐடி விங் வாட்ஸ் அப் க்ரூப்புகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
“ஓபிஎஸ் அமைதியாக இருக்கும் வரை கண்ட …..கள் எல்லாம் பேசி கொண்டு தான் இருக்கும். சிங்கத்தின் கர்ஜனை(OPS) வெளிவந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு. அம்மா அவர்கள் யாரை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்தார்களோ… அவரே எங்கள் தலைவர்” என்றும் பதிவிட்டு பரப்பி வருகிறார்கள் ஓ.பன்னீர் ஆதரவாளர்கள்.
விருதுநகர் மாவட்ட லோக்கல் அதிமுகவினரோ, “மீண்டும் மாவட்டப் பொறுப்பு கிடைத்ததும் விருதுநகர் வந்தார் ராஜேந்திரபாலாஜி. ஆனால் மொத்தமுள்ள நகர, ஒன்றிய செயலாளர்களில் ஒரு சிலரே அவரை சந்திக்கச் சென்றனர். பெரும்பாலான ஒன்றிய, நகர செயலாளர்கள் அவரை சென்று சந்தித்து வாழ்த்தவில்லை. இதுதான் எதார்த்தம்” என்கிறார்கள்.
**-ஆரா**�,