குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று (டிசம்பர் 17) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “பல நூறு ஆண்டுகளாக இருக்கும் ஒற்றுமையில் நஞ்சை கலக்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? எதற்காக இந்த ஓரவஞ்சனை?” என்று கேள்வி எழுப்பினார்.
சென்னையில் திமுக சார்பில் நான்கு இடங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் கணிசமாகக் கூடியிருந்தனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி.யும், வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதவரம் சுதர்சனம், கலாநிதி வீராசாமி எம்.பி ஆகியோரும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
வேலூர் மாவட்ட திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ராணிப்பேட்டையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் திமுக அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசு மற்றும் அதிமுகவைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பெரம்பலூரில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையிலும், நாமக்கல்லில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்துகொண்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் தளபதி, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுபோலவே மதுரை வடக்கு, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பாக ஒத்தக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன. கோவையில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபோலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.�,”