மழை பாதிப்பைத் தடுக்க திட்ட அறிக்கை: முதல்வர் உத்தரவு!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சென்னை வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 3) நடைபெற்றது

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவர் திருப்புகழ் (ஓய்வு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், மழை பெய்யாதா? மழை பெய்யாதா? என்று ஏங்கி இருந்த காலம் போய் – மழை நிற்காதா? மழை நிற்காதா? என்று பதறக்கூடிய காலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அக்டோபரில் தொடங்கி, நவம்பர் முழுக்க மழை பெய்தது. நல்லவேளை, டிசம்பர் மாதம் மழைக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாகத்தான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சர்கள் முதல் அனைத்துத் துறைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் ஏன், தலைமைச் செயலாளர் முதல் அனைவரும் முன்கள பணியாளர்களாகக் களத்தில் நின்றதால் தான், முன்பு ஏற்பட்ட இறப்பு, பாதிப்புகளோடு ஒப்பிடும்போது இப்போதைய பாதிப்பு என்பது மிகமிகக் குறைவாக உள்ளது. முன்களப் பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்” என்றார்.

மேலும் அவர், “இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்புகள் வராமல் தடுத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும்.அதற்காகத்தான் திருப்புகழ் தலைமையில் குழுவை அமைத்திருக்கிறோம்.

சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழுவில் இருக்கக்கூடிய நீங்கள் அனைவரும் உங்களது துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய விரிவான திட்டங்களை நீங்கள் உடனடியாக அரசுக்கு வழங்கிட வேண்டும்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்படச் சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். வெள்ளத் தடுப்பு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டம் குறித்தும் நீங்கள் திட்டம் தீட்டி வழங்க வேண்டும். பகுதிவாரியாகவும் தர வேண்டும். துறைவாரியாகவும் வழங்க வேண்டும்” என்றார்.

“நேற்றையதினம் நான் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, சுமார் 65 வயதுடைய தாய்மார் ஒருவர் என்னைப் பார்த்து, எங்கிருந்து வெள்ள நீர் வருகிறது, எப்படி வருகிறது – எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகச் சொன்னார்.

எப்படி தென் சென்னை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி என்று ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக ஏற்பட்ட விளைவின் காரணமாகத்தான் தி.நகர் பகுதியில் தண்ணீர் 5, 6 நாட்கள் தொடர்ந்து தேங்கியிருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல்தான் தூத்துக்குடியிலும் ஏற்பட்டிருக்கிறது. அங்கேயும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று சொல்லி, கால்வாய்களை அடைத்துவிட்டார்கள். அதனால்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது எங்கிருந்து வருகிறது – எந்தெந்த கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது – என்று அங்குள்ள தாய்மார்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். எனவே, நம்முடைய அதிகாரிகளும் அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களுடைய கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் அதிக மழை பெய்தால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்றால் – அனைத்துப் பகுதியிலும் ஒரே மாதிரியான மழை நீர் வடிகால் அமைப்பு முறை இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல்கள் தேவைப்படுகிறது. எனவே பகுதி வாரியாக – குறிப்பான ஆலோசனைகள் தேவை. திட்டமிடுதல்கள் தேவை. இவை அனைத்தையும் உடனடியாகவும் செய்தாக வேண்டும்.

எனவே திட்டங்கள் தீட்டுவதற்கே பல மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை நீங்கள் கொடுத்தாக வேண்டும். அதுபோன்று விரைவாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம் .

கடந்த காலங்களில் மழை நீர் அதிகம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டு ஆராய்ந்து, அவ்விடங்களில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கக் கூடுதல் கவனம் செலுத்தி மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான உரிய வழி முறைகளைக் கையாள வேண்டும்.தொடர்புடைய அனைத்துத் துறைகளும் இக்குழுவிற்குத் தேவையான அடிப்படை விவரங்கள் வழங்கி, முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் சென்னை மட்டுமின்றி – தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக விளங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. எனவே, மக்கள் தங்களுக்குள் ஓரளவு சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து வரும் காலங்களில் நம்மிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். நாம் போகும் இடங்களில் அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் வந்து ஐந்து, ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. நிச்சயமாக அடுத்த வருடம் இதுபோன்று மழை வருவதற்கு முன்னதாக, இதையெல்லாம் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பொது மக்கள் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையைத் தாருங்கள் – அதை விரைவாகத் தாருங்கள் – துல்லியமாகத் தாருங்கள் – நடைமுறைச் சாத்தியம் உள்ள திட்டங்களாகத் தாருங்கள்” என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share