iமுதல்வருக்கு ஏன் போலீஸ் துறை? ஸ்டாலின்

Published On:

| By Balaji

சாத்தான்குளம் சம்பவத்தை மறைக்க முயன்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கடந்த ஜூன் 28ஆம் தேதி விசாரணை நடத்தினார். எனினும், தனக்கு காவல் அதிகாரிகள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், உன்னால ஒன்னும் புடுங்க முடியாது என காவலர் ஒருமையில் பேசியதாகவும் நீதிபதி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், “இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிள் ஆகிய இடங்களில் ரத்தக்கரை படிந்துள்ளதாகும் தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “உயர்நீதிமன்றம் அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது? மன உளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா?இந்த மிரட்டல் – உருட்டல், ஆவணங்கள் தர மறுப்பு, காவல் நிலையத்தில் கொலைக்கான சாட்சியங்கள் அழிப்பு ஆகிய அனைத்தும் கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரளவில் முடிவு எடுத்து அரங்கேற்றப்பட்டவை என்பதை நம்ப முடியாது.

உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்து விட்டன என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இருவரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று முதலமைச்சர் சொன்னதன் பின்னணி இந்த காவல் நிலைய ரத்தக் களறியை மறைக்கத்தானே எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது தமிழகக் காவல்துறை வரலாற்றில் மிகப் பெரியதொரு கரும்புள்ளி! பிறகு போலீஸ் துறையை முதலமைச்சர் இன்னும் வைத்திருப்பது ஏன்?” என்று கேட்டுள்ளார்.

“அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி எப்படி அபாண்டமாக அறிக்கை வெளியிட்டார்? ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்க சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளுடன் முதலமைச்சரும் இணைந்தே செயல்பட்டார் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம்” என்று சந்தேகம் எழுப்பிய ஸ்டாலின்,

“போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். எனவே, அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திட வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share