�எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள், நாங்கள் செயல்வீரர்கள்: எடப்பாடி

Published On:

| By Balaji

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலத்தின் போது வெளியேறும் உபரி நீர், சேலம் மாவட்டத்திலுள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்து திருப்பி விடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தார். அதன்படி, சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று (மார்ச் 4) நடந்த நிகழ்ச்சியில் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரிநீரை கொண்டுவரும் சரபங்கா திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்கப் பெறாத மகிழ்ச்சி எனக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்திருக்கிறது. இந்தப் பகுதியானது வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற பகுதி. எனக்குத் தெரிந்தவரை இங்குள்ள 100 ஏரிகளும் இதுவரை வறண்டுதான் இருந்திருக்கின்றன. இதுபோன்ற வறண்ட ஏரிகளில் பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீரை நிரப்ப வேண்டுமென்பதற்காக சுமார் 565 கோடி ரூபாயில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 11 மாதங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, மேட்டுப்பட்டி ஏரி நிரம்பி, இந்தப் பகுதியில் வேளாண் பணிகள் சிறக்கும், குடிநீர்ப் பிரச்சினை முழுவதும் தீர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

சொன்னதைச் செய்கின்ற ஒரே அரசு அதிமுக அரசு என்றும், திட்டத்தை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றுகிற அரசு எங்கள் அரசல்ல எனவும் குறிப்பிட்ட முதல்வர், “குடிமராமத்துத் திட்டம், முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, குடிமராமத்துத் திட்டத்திலே முறைகேடு நடைபெற்றதாக ஒரு பொய்யான செய்தியை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சியினர் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் என்றும், தாங்கள் அப்படியல்ல, செயல் வீரர்கள் என செயலிலே காட்டிக் கொண்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டவர், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு, அரசின் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். எவ்வளவு குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

எங்கள் மடியிலே கனமில்லை, அதனால் வழியிலே பயமில்லை, எங்களுடைய மனம் திடமாக இருக்கின்றது, எடுக்கின்ற முடிவும் திடமானது. அந்தத் திடமான எண்ணத்தின் அடிப்படையில், நிறைய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள், மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய லட்சியம், அந்த லட்சியப் பயணத்திலே நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம்” என்று பேசினார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share