சென்னையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (நவம்பர் 16) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது, சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக சாம் வின்சென்ட் என்பவர் பணியாற்றி வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்கள், இருவரும் மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றினர்.
தற்போது இவர்களுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “சென்னை சிட்டியில் ஒவ்வொரு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐந்து முதல் பத்து ஸ்பா செண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்பா செண்டர்கள் உள்ளன. இதில் மாதமாதம் மாமூல் வாங்குவது, தவறு நடக்கும் விடுதிகளிலும், முக்கியமான பகுதியில் வீடு வாடகை எடுத்து விபச்சாரம் நடத்தி வருபவர்களிடமும் சிலர் மாமூல் வாங்குவார்கள். இதில் மாதத்துக்கு ஒரு கேசு என கணக்கும் காட்டுவார்கள்.
சென்னை மாநகரில், ஒரு டீமுக்கு ஒரு ஏசி இரண்டு இன்ஸ்பெக்டர்கள் என விபச்சார தடுப்பு பிரிவு டீம் இரண்டுதான் உள்ளது.
இதில், இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டுமே மாத மாமூல் மூலம் சுமார் ரூ. 20 லட்சம் வரை கூட கிடைக்கும். மாமூல் பிரச்சினையால் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டு காவல் நிலையத்தில் புகாரானதும் உண்டு.
சாம் வின்சென்ட், சரவணன் இருவரும் விபச்சார தடுப்பு பிரிவில் பணி செய்தபோது அதிகமாக மாமூல் வாங்கி சொத்து சேர்த்து இருப்பதாக பலரிடமிருந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் காலை முதல் இரு ஆய்வாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர் என்றனர்.
**-வணங்காமுடி**
�,”