டிஜிபியைக் குறிவைக்கும் அண்ணாமலை: பாஜகவுக்குள் புகைச்சல்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் இதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் மீதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் குறித்தும் வகைதொகையான விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை குறிவைத்து ஓரிரு நாட்களாக சரமாரியான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்

மாரிதாஸ் கைதுக்குப் பிறகு ஆளுநரை சந்தித்த அண்ணாமலை, ‘தமிழகத்தில் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மீதும் பாஜக ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தேச விரோதப் பதிவுகளை பகிரங்கமாக இடும் திமுக,திக போன்ற அமைப்புகளைச் சேர்ர்ந்த பலர் கண்டுகொள்ளப்படுவதில்லை, சட்டம் பாரபட்சமான முறையில் பயன்படுத்தப்படுகிறது” என்று டிஜிபி சைலேந்திரபாபு மீதும் தமிழக அரசு மீதும் புகார் கூறியிருக்கிறார்.

தமிழக டிஜிபி செல்ஃபி எடுக்கவும், சைக்கிளிங் செய்யவும்தான் லாயக்கு என்ற அண்ணாமலை இன்றைய (டிசம்பர் 13) தி ஹிந்து ஆங்கில நாளேட்டுக்குக் கொடுத்துள்ள பேட்டியில் டிஜிபி சைலேந்திரபாபுவை, In fact, I will use the word ‘incompetent’. என்று கடுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே பேட்டியில், “நீங்கள் இதுபற்றியெல்லாம் போலீசில் புகார் கொடுத்துள்ளீர்களா?” என்ற கேள்விக்கு, “ஆன்லைனில் புகார் கொடுத்துள்ள்ளோம்” என்று பதிலளித்துள்ளார் அண்ணாமலை. நேரடியாக ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “ இதுவரை, கடந்த ஐந்தாண்டுகளில் [அதிமுக ஆட்சியில் இருந்தபோது] காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு புகாரும் மனுவாக மாற்றப்பட்டு தூக்கி எறியப்படுகிறது” என்று பதிலளித்துள்ளார் அண்ணாமலை.

அதாவது பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொடுக்கப்பட்ட புகார்களும் காவல்துறையால் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

அப்படியிருக்க தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர் தாக்குதல் நடத்திவருவது பற்றி பாஜகவுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, “அண்ணாமலையின் அணுகுமுறை பல மூத்த தலைவர்களுக்கு உவப்பாக இல்லை. பல்வேறு விஷயங்களில் முதிர்ச்சியாக இல்லாமல் முரட்டுத் தனமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். அண்ணாமலை இந்த விவகாரத்தில் ஆளுநரை சந்தித்தற்கு பதிலாக நேரடியாக டிஜிபியையே சந்தித்திருந்தால் விளைவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்திருக்கும்.

உதாரணத்துக்கு கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு தொடர்பாக பாமக தொடர் சட்டப் போராட்டம் நடத்தியது. கொல்லப்பட்ட முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலை அழைத்துக்கொண்டு நேராக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்தார் பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு. தங்கள் தரப்பில் இருக்கும் ஆவணங்களை எடுத்துரைத்தார். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எம்பியை சிறைக்கு அனுப்பாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது சரியா என்று டிஜிபியிடம் கேள்வி கேட்டார். அடுத்தடுத்த வாரங்களில் எம்பி கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் சட்ட ரீதியாக ஜாமீனில் வந்தார். பாமக இப்படி யாரை சந்தித்து எதை முறையிட வேண்டும் என்ற தெளிவோடு செயல்படுகிறது.

ஆனால் பிபின் ராவத் விவகாரத்தில் தேச விரோத பதிவுகள் நூற்றுக் கணக்கில் தன்னிடம் இருப்பதாக கூறும் அண்ணாமலை அதை நேரடியாக டிஜிபியையே சந்தித்து ஒப்படைத்திருக்கலாம்.. அப்படி ஒப்படைத்து இவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளித்திருக்கலாம் அதன் மூலம் டிஜிபிக்கு ஊடகங்கள் மூலம் உருவாக்கும் நெருக்கடியை விட அதிக நெருக்கடியை உண்டாக்கலாம். அரசியல் ரீதியாகவும் இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். அதை விட்டு ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பது என்பது இந்த விஷயத்தில் தலையை சுற்றி மூக்கைத் தொடும் வகையில் இருக்கிறது. அதுவும் மூத்த தலைவர்களை ஆலோசிக்காமல் ஆளுநரை சென்று சந்தித்திருக்கிறார் அண்ணாமலை. இதெல்லாம் பாஜகவுக்கு எவ்வளவு நன்மை பயக்குமென்று தெரியவில்லை என்பது மூத்த தலைவர்களின் வருத்தம்” என்கிறார்கள்.

இன்னொரு விவகாரமும் பாஜகவுக்குள் இப்போது விவாதிக்கப்படுகிறது.

“முதல்வர் ஸ்டாலின் டிஜிபி பதவிக்காக ஷகில் அக்தரை நியமிக்க இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆலோசித்திருக்கிறார். தேர்தலில் தனக்கு பெருவாரியாக வாக்களித்த சிறுபான்மையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் டிஜிபி பதவியை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த அதிகாரியான ஷகில் அக்தருக்கு வழங்கலாம் என்றுதான் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனைகள் நடந்தன. அந்த நிலையில்தான் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவரும், மோடி- அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் வீடு தேடிச் சென்று சந்தித்தார். முதல்வர் பதவியேற்று பல நாட்கள் ஆன பிறகு நடந்த இந்த சந்திப்பு ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்குப் பிறகு நடைபெற்றது.

டெல்லி பயணத்தின் நீட்சியாக இந்த சந்திப்பு அமைந்தது என்று அரசியல் வட்டாரத்தில் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் டிஜிபி பற்றியும் பேசப்பட்டிருக்கிறது என்றும், அதன் அடிப்படையிலேயே சைலேந்திரபாபு நியமனம் நடைபெற்றிருக்கிறது என்றும் வெள்ளை மாளிகையலேயே பேசி வருகிறார்கள்” என்று போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தை மேற்கோள் காட்டி மின்னம்பலத்தில் [டிஜிபி சைலேந்திரபாபு: தமிழிசை கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்](https://minnambalam.com/politics/2021/07/01/26/dgp-sylendrababu-tamilisai-mkstalin-demand) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போதைய டிஜிபி மீது அண்ணாமலை காட்டி வரும் கடுமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்றும் பாஜகவுக்குள் பேச்சுகள் ஒலித்து வருகின்றன.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share