அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை, பதினோரு பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டதன் மூலம் தீர்ந்துவிட்டது என்று கூறப்படும் நிலையில்… இந்த வழிகாட்டும் குழுவை அடிப்படையாக வைத்தே புதிய பிரச்சினைகளும் புறப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே சென்னையை சேர்ந்த ஜேசிடி பிரபாகர் வழி காட்டும் குழுவில் இடம் பெற்றதை எதிர்த்து தமாகாவுக்கு சென்று வந்தவருக்கு எப்படி கட்சியின் உயர்மட்டக் குழுவில் இடம் கொடுக்கலாம் என புகார்கள் சென்றிருந்தன. இதுபற்றி மின்னம்பலத்தில் [செய்தி](https://minnambalam.com/politics/2020/10/09/25/admk-stearing-commitee-members-jcd-prabakar-ops) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் வழிகாட்டும் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் சொந்த ஊருக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான மோகன் தன் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு உள்ளேயே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அதிமுகவின் பதினோரு பேர் கொண்ட வழிகாட்டும் குழுவில் முன்னாள் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) முன்னாள் அமைச்சருமான ப. மோகன் நியமிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அக்டோபர் 8 ஆம் தேதி மோகன் கள்ளக்குறிச்சி வந்தார். அவருக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு உள்ளிட்ட பலரும் வரவேற்பளித்தனர். வரவேற்பளித்தவர்களில் பெரும்பான்மையோர் மோகன் மாவட்ட செயலாளராக இருந்தபோது பதவியில் இருந்து தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத வர்கள் தான்.
வரவேற்புக்கு பின் கள்ளக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்திற்கு காலை 12 மணியளவில் சென்றார் மோகன். தனது ஆதரவாளர்களுடன் மோகன் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, சற்று நேரம் முன்பு வரை திறந்திருந்த கட்சி அலுவலகம் அப்போது மூடி பூட்டு போடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியான மோகனின் ஆதரவாளர்கள் சிறிது நேரம் அங்கே கூடிநின்றனர். அவர்களோடு மோகனும் காரில் காத்திருந்தார்,
“என்ன இது நம்ம வர்றமுனு தெரிஞ்சும் மாவட்ட ஆபீசை பூட்டிட்டுப் போறாங்க? இதெல்லாம் மாவட்டச் செயலாளர் குமரகுரு வேலைதான். பூட்டை உடைச்சிட்டு உள்ள போவோமா?” என்றவாறு மோகனின் ஆதரவாளர்கள் ஆலோசிக்க. இதை அறிந்த மோகன் அவர்களைத் தடுத்து மாவட்ட அலுவலக வாசலில் இருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டார்.
நம்மிடம் பேசிய மோகனின் ஆதரவாளர்கள், “மோகன் இப்போது அமைப்புச் செயலாளர், மாநில அளவிலான பதவியில் இருப்பவர். கூடவே கட்சியின் உயர் மட்ட குழுவான வழிகாட்டும் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். அவர் வருகிறார் என்று தெரிந்தே கட்சி அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். இதற்குக் காரணம் மாவட்டச் செயலாளரான குமரகுருதான். ஏற்கனவே மோகனுக்கும் குமரகுருவுக்கும் இந்த மாவட்ட அளவில் அரசியல் ரீதியாக பிடிக்காது.
1998 இல் இருந்து மாவட்டச் செயலாளராக இருந்த மோகன் மீது புகார்களை சொல்லி 2004 ஆம் ஆண்டு கொளப்பாக்கத்தில் நடந்த நேர்காணலில் மோகன் மாசெ பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் ஜெயச்சந்திரன் என்பவர் மாசெஆக நியமிக்கப்பட்டார். உளுந்தூர் பேட்டை ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயச்சந்திரன் திமுகவினருடன் தொடர்பில் இருப்பவர் என்று போட்டோ ஆதாரத்துடன் அப்போது தலைமைக்குப் புகார் அனுப்பினார்கள். அதையடுத்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார். அப்போது ஜெயச்சந்திரன் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் பேசி தனக்கு பதிலாக தன் ஒன்றியத்தில் துணைச் செயலாளராக இருந்த குமரகுருவுக்கு மாசெ பதவியை வாங்கினார்.
குமரகுரு மாசெ ஆனதும் மோகன் பதவிக் காலத்தில் போடப்பட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டார். பின்பு மோகன் மீண்டும் மாசெ ஆனார். அதன் பின் மீண்டும் குமரகுரு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தார். இப்படி இருவருக்கும் இடையே அரசியல் மோதல்கள் தொடர்கின்றன. இந்தக் காரணத்தால்தான் தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீர் பக்கம் சென்றார் ப.மோகன். தற்போது மோகனுக்கு வழிகாட்டும் குழு உறுப்பினர் என்ற முக்கியமான பதவி கிடைத்திருக்கும் நிலையில் அதை விரும்பாத குமரகுருதான் இப்படி மாவட்ட அலுவலகத்தின் பூட்டை பூட்டி சாவியை எடுத்துப் போகச் சொல்லிவிட்டார்” என்கிறார்கள்.
ஆனால் இதை குமரகுரு ஆதரவாளர்கள் மறுக்கிறார்கள். “கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட அலுவலகம் வழக்கமான முறையில் திறக்கப்படுவதில்லை. அதனால்தான் பூட்டப்பட்டிருந்தது” என்கிறார்கள் அவர்கள்,
கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதன் மூலம் அதிமுகவின் கோஷ்டிப் பூசல் திறந்த வெளிக்கு வந்திருக்கிறது.
**-வேந்தன்**�,