�பலத்தை ‘அறிந்த’ பன்னீர்: பாய்ச்சல் காட்டிய எடப்பாடி- அதிமுக கூட்டத்தில் நடந்தது இதுதான்!

politics

மே 10 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர் செல்வத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் சுமார் 1 மணி வரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையே நிலவிய நிலையில்தான், எடப்பாடிக்கும் ஓ.பன்னீருக்கும் இறுதிகட்டத்தில் நடந்த வாக்கு வாதத்தின் முடிவில், ‘நீங்களே இருந்துட்டுப் போங்க’ என்று அழுகையும் ஆத்திரமுமாக ஓ.பன்னீர் எழுந்து சென்றுவிட்டார். அதன் பிறகே இந்த முடிவு உடனடியாக அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு கூட்டம் கூடியதும் ஏற்கனவே மே 7 ஆம் தேதி நடந்த விவாதங்களே தொடர்ந்துள்ளன.

’எடப்பாடியார் தான் சட்டமன்றத் தேர்தலை முன்னின்று நடத்தினார். எடப்பாடியார்தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முகமாக இருந்தார். தொண்டை வறள பேசி தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்தார். எல்லா தொகுதிகளுக்கும் பணத்தையும் செலவு செய்தார். இதற்கு மேல் என்ன வேண்டும்? எடப்பாடியாரை எதிர்க்கட்சித் தலைவராக்குவதே ஜனநாயகம்: என்று கொங்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேசினார்கள்.

அதற்கு எதிர்த்துப் பேச ஓ.பன்னீருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் பெரிதாக யாரும் இல்லை. மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு தவிர வேறு யாரும் ஓ.பன்னீருக்கு உறுதியாக ஆதரவு தரவில்லை.

ஒருகட்டத்தில் உருக்கமாக பேசிய ஓ.பன்னீர், “நாம் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்க வேண்டியது. திமுக இருநூறு வரும், இருநூற்று இருபது வருமென்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு வந்ததோ வெறும் 125. நாம் இன்னும் கடுமையாக தமிழ்நாடு என்ற பொதுவான அளவில் கட்சியைக் கொண்டு போயிருந்தால் இந்தத் தேர்தலில் நாமே ஜெயித்திருப்போம். ஆனால் ஒரு பகுதியை மட்டுமே முன்னேற்ற வேண்டும், ஒரு பகுதியில் இருப்பவர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்று கட்சியை குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்ததால்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது. இந்த முடிவுகளுக்கெல்லாம் காரணம் யார்?

கடைசி நேரத்தில் தேமுதிகவை கழற்றிவிட வேண்டியது ஏன், கட்சியின் ஒன்றுவிட்ட சகோதரர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள எதிர்த்தது ஏன்?” என்றெல்லாம் ஓ.பன்னீர் கேள்விகளை எழுப்பினார். ஆனால் பலரும் எடப்பாடியார்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒருகட்டத்தில் ஓபிஎஸ், ‘நீங்கள் கொங்கு பகுதியில் இருந்துதானே எதிர்கட்சித் தலைவர் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? சரி. அப்படியென்றால் அம்மாவால் சபாநாயகராக ஆக்கப்பட்ட அண்ணன் தனபாலை நான் முன்மொழிகிறேன். அதை நீங்கள் ஏற்கிறீர்களா?’என்று கேட்க தனபால் மட்டுமல்ல, எடப்பாடியும் ஷாக் ஆனார்.

அப்போது எடப்பாடி குறுக்கிட்டு, “அண்ணே…உங்க கருத்துகளை எல்லாம் மனசுல வச்சுக்கிறோம். இப்படி கருத்து வேறுபாடுகள் வர்றப்ப தேர்தல் வச்சிப் பார்க்குறதுதானே ஜனநாயகம். எதிர்க்கட்சித் தலைவர் யார்னு தேர்தல் வச்சிப் பாத்துடுவோம்ணே…”என்று கேபி. முனுசாமியைப் பார்த்தார்.

மூன்று மணி நேர போராட்டத்தில் தனக்காக மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜூ தவிர உறுதியான ஆதரவை தெரிவிக்க யாரும் தயாராக இல்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ், ‘நீங்களே இருந்துட்டுப் போங்க. என்னமோ பண்ணிட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டு விருட்டென எழுந்து கூட்ட அரங்கில் இருந்து புறப்பட்டுவிட்டார்.

அதன் பின் நேற்று மாலை ஓ.பன்னீரின் வீடு தேடிச் சென்று அவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற்றதாக படத்தோடு செய்திகள் வந்தன.

**-வேந்தன்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *