மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி

Published On:

| By Balaji

சிகிச்சை கூட முடியாமல் தன்னை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்ட அவர், சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துறையினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 28) பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, “மூச்சுவிடவே சிரமமாக இருக்கும் நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்துகின்றனர். இந்த வழக்கை வெளிவரவிடாமல் தடுக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. சிகிச்சை முடியும் முன்பே என்னிடம் கேட்காமலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். நான் முழுமையாக குணமடையாத நிலையில் என்னை டிஸ்சார்ஜ் செய்வது ஏன் ” என்று கேள்வி எழுப்பினார்.

தனக்கு ஆதவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமும் தற்போது தன்னுடன் இல்லை என்ற விஜயலட்சுமி, “எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. நான் நாடகமும் ஆடவில்லை. சீமானின் அராஜகங்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறது. சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்காது, நீங்கள் போராட்டம் நடத்துங்கள் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். அப்படி போராட்டம் நடத்தினால்தான் தீர்வு வரும் என்றால் இங்கேயே அமர்ந்து போராடத் தயாராக இருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

உங்களுடைய கோரிக்கை என்ன என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “என்னை ஏன் நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் என்றுதான் கேட்கிறேன். நான் இவ்வளவு தூரம் சென்றபிறகும் அதுகுறித்து சீமான் எதுவும் பேச மறுக்கிறார். இதுதான் ஒரு தலைவருக்கு அழகா? என்னிடம் பேசினாலே பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடுமே..” என்று பதிலளித்தார் விஜயலட்சுமி

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share