fமருத்துவமனையில் தீ விபத்து: 13பேர் பலி!

Published On:

| By Balaji

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 13 பேர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வழிகளில் மக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலையைத் தாண்டி, தற்போது ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதிலும்தான் இறப்புகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.

மகாராஷ்டிரா, பல்கார் மாவட்டம் வாசய் பகுதியில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 23) அதிகாலை 3.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த பிரிவில் 18 நோயாளிகள் சிகிச்சை பெற்று கொண்டிருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் கிட்டதட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் போராடி 5.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில்,”தீ விபத்து சம்பவம் துயரமானது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிகிச்சையில் இருப்பவர்கள்விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

விபத்தில் 13 நோயாளிகளின் மரணம் குறித்து வருத்தத்தை தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மற்ற நோயாளிகள் அனைவரையும் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சம் முறையாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

”மேலும் ஒரு அழிவுகரமான சம்பவம். உயிரிழப்பு சம்பவம் குறித்து கேள்விபட்டதுடன் மிகவும் வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த நோயாளிகள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என பாஜக தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான், நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 பேர் உயிரிழந்த சம்பவம் நினைவில் இருந்து மறைவதற்குள், அடுத்த 13 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share