ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் பணியினை இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பயன்களின் நிலுவைத் தொகையான 497.32 கோடி ரூபாயை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் அடையாளமாக, 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் இறையன்பு ,போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் ,மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பணப் பலன்களை விடுவிக்கும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ரூ.682.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அன்றே தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் முடிவடைந்துள்ள சூழலிலும், ஓய்வூதியப் பயன்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களை சென்றடையவில்லை.
ஓய்வூதிய பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே நிதிஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஓய்வூதிய தொகையை வழங்கும் பணியினை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
**-வினிதா**
�,