vநகர்புற உள்ளாட்சித் தேர்தல்: 57,778 பேர் போட்டி!

politics

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிடுகின்றனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4ஆம் தேதிவரை நடைபெற்றது. இதையடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு பிப்ரவரி 7ஆம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் வேட்புமனுக்கள் பரிசீலனையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்படாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், இறுதியாக தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்ற விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிடுகின்றனர். 1,370 மாநகராட்சி வார்டுகளுக்கு 11,196 பேரும், 3,825 நகராட்சி வார்டுகளுக்கு 17,922 பேரும் போட்டியிடுகின்றனர். 7,412 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 28,660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான 1374 பதவியிடங்களுக்கு 14,701 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 722 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2779 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 1,370 பதவியிடங்களுக்கு 11,196 பேர் போட்டியிடுகின்றனர்.

நகராட்சி வார்டு உறுப்பினருக்கான 3843 பதவியிடங்களுக்கு 23,354 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். அதில், 691 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 4723 பேர் மனுவை திரும்ப பெற்றனர். 18 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 3825 பதவியிடங்களுக்கு 17,922 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான 7609 பதவியிடங்களுக்கு 36,328 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 649 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 6822 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். மேலும் 196 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வேட்புமனு தாக்கல் செய்யப்படாத ஒரு பதவியிடம் தவிர, 7412 பதவியிடங்களுக்கு 28,660 பேர் போட்டியிடுகின்றனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *