ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக 4 பேர் கைது!

Published On:

| By Balaji

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உதவியதாக 4 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆவின் உள்ளிட்ட அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அவர் தலைமறைவானார்.

8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, டெல்லி என வேறு மாநிலங்களிலும் ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், 20 நாட்களுக்கும் மேலான தேடுதல் வேட்டை இன்று முடிவுக்கு வந்தது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷன், விருதுநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் ராஜேந்திர பாலாஜி உறவினர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருவர் தனக்கு உதவியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share