சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது: செந்தில் பாலாஜி

Published On:

| By admin

தமிழகத்தில் நேற்று மாலை முதல் சீரான மின்சார விநியோகம் இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் மின்தடை இருந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 4 நாட்களாகக் கடுமையான மின் தடை இருந்தது. இதற்கு, தென்மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 750 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து வரவில்லை என்றும் நிலக்கரியும் 72 ஆயிரம் டன்னுக்கு பதிலாக 50 ஆயிரம் டன்னுக்குக் குறைவாகவே மத்திய வழங்குகிறது. அதனால் மின் தடை ஏற்பட்டது. அதைச் சீர் செய்ய தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
ஆனால், கடந்த 20ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையங்களில் மொத்தமுள்ள 5 யூனிட்களில் 4 யூனிட்கள் நிறுத்திவைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் மின் வெட்டு ஏற்பட்டது. தனியாரிடம் இருந்து மின்சாரம் செய்து ஊழல் செய்வதற்காகவே இதுபோன்று செய்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் எடுத்த சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று (நேற்று) மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel