காவல்துறையினர் குற்றவாளிகளோடு தொடர்பில் இருக்கிறார்களா எனக் கண்காணித்து வருகிறோம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 31) நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, “தமிழகத்தில் ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு சரகம் வாரியாக ஆய்வு நடக்கிறது. ஏற்கனவே காஞ்சிபுரம், வேலூரில் ஆய்வு நடந்தது. இன்று விழுப்புரத்தில் ஆய்வு நடத்தியிருக்கிறோம்.
இரண்டு மூன்று நாட்களாக ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது. காவல்நிலையங்களில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கின்ற வாகனங்களை ஏலம் விட்டு வருமானம் ஈட்டச் சொல்லியிருக்கிறோம். இதன்மூலம் விழுப்புரத்திலும், கடலூரிலும் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
காவல்துறை பணி என்பது உண்மையிலேயே கடுமையான பணி. சில சமயங்களில் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் வாரத்திற்கு ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை வழங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிஎஸ்ஓ எனப்படும் காவல்துறையைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து இந்தியாவிலேயே முதன் முறையாக விடுமுறை அறிவித்திருக்கிறார். காவல்துறையினருக்கான இதுபோன்ற அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் வரும். அதுவரை காத்திருக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகளைக் கண்காணித்து வருகிறோம். சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் இதுபோல ஒரு சில அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்து அவர்களைக் கூண்டோடு மாற்றியிருக்கிறோம்” என்று கூறினார்.
**-பிரியா**