sபட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள் என்னென்ன?

politics

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மார்ச் 18) 107 பக்கங்கள் கொண்ட 2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

**தொல்லியல் துறை**

அதில், சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளுடன், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழ்வாய்வுகளை மாநில தொல்லியல் துறை மேற்கொள்கிறது.

கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள, உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பவங்களும் மேம்படுத்த வேண்டும். ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

**வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை**

நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு ரோவர் கருவிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

அரசு நிலங்களில் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களை தீர்க்கவும் அரசு நிலங்களை நியாயமான வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகை கொள்கை வகுக்கப்படும்.

அரசு நிலங்களை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை பெருநகர பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மற்றும் பரிந்துரைகளை வழங்க ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின் படி வெள்ள தடுப்பு பணிகள் முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதற்கு முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதிய திட்டம்,ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியர்களுக்கான 4816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 7474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**தீயணைப்பு துறை**

இந்த நிதியாண்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

**நிதி நிர்வாகம்**

வணிக வழக்குகளை விசாரிப்பதற்காக 7 வணிக நீதிமன்றங்கள் அமைத்திட இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீட்டில் நிதிநிர்வாகத் துறைக்கு 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு**

பயிர்க் கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகை கடன் தள்ளுபடி 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாய் என இம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே முதன்முறையாக கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம் மதிப்பீட்டில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**பாசனம்**
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதற்காக இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பு மேலாண்மை செய்வதற்காகவும் ,பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும் 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநில பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாதல் போன்ற பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சாத்தனூர், சோலையூர், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும் அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும், இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக இம்மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் கடைமடை பகுதிகள் வரை சென்றடைய டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் நீர் வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**கால்நடை பராமரிப்பு**

விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறைக்கு 1314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனம்**

லண்டன் கியூ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாத்தல் அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாதுகாப்பு திட்டத்தை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைப்பு செய்து, பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**உயர்கல்வித் துறை**

தமிழகத்திலுள்ள திறன்மக்க மனித வளத்தை மேம்படுத்தி, ஓர் அறிவு சார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்கு பார்வை ஆகும். உலக பங்களிப்புடன் அறிவுசார் நகரம் ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவுசார் நகரம் உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப அரசு கல்லூரிகள் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி புதிய வகுப்பறைகள் விடுதிகள் ஆய்வகங்கள் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும் இதற்காக இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு காரணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்கு என 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.

**இளைஞர் நலன்**

தமிழ்நாட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும், உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க திட்டத்தை செயல்படுத்த 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.

வடசென்னையில் விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் உடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்று உருவாக்கப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**மக்கள் நல்வாழ்வு**

தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காக 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட முதல்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை 750 படுக்கை வசதிகளுடன், தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள மாணவர்கள் நமது நாட்டிலோ பிற வெளிநாடுகளிலும் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழி முறைகளின் அடிப்படையில் அவர்களது எதிர்கால மருத்துவ கல்விக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்.

தேசிய ஊரக சுகாதார இயக்க திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு 1547 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மொத்தம் 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள்
உயர்கல்வியில் சேரும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயன் பெற வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு 1949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *