மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 4 ஆம் தேதி தன் குடும்பப் பயணமாக அமெரிக்கா சென்றார். ஏப்ரல் முதல் வாரத்தில் அவர் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், கொரொனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுனில் அரோரா அமெரிக்காவிலேயே சிக்கிக் கொண்டார். மே மாத இறுதியில்தான், அவர் மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார்.,
தலைமை தேர்தல் ஆணையர் இந்தியா திரும்பும் முன்பே, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகிய தேர்தல் ஆணையர்கள் தலைமை தேர்தல் ஆணையரோடு ஆலோசனை நடத்திவருகிறார்கள். பிகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வந்துகொண்டிருக்கும் நிலையில்… மத்தியப் பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் வர இருக்கிறது. இது தொடர்பாகவும், கொரோனா நிவாரண நிதிக்கான தலைமை தேர்தல் ஆணைய ஊழியர்களின் ஊதியம் தொடர்பாகவும் அமெரிக்காவில் இருந்தே ஆலோசனை நடத்தினார் அரோரா.
மே 3 ஆவது வாரத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் அரோரா டெல்லி வந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று அரோராவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் 2021 மே மாதம் வரை இருக்கிறது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலை ஆறு மாதம் முதல், ஒரு வருடம் வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் இருந்து ஏற்கனவே பிரதமர் மோடிக்கு முன்னாள் எம்பி நரசிம்மன் கடிதம் எழுதியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதோடு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் நரசிம்மன் தன் கடிதத்தில் வலியிறுத்தியிருந்தார். இதை அடிப்படையாக வைத்து பாஜக தேர்தலை தள்ளி வைக்க கணக்குப் போடுவதாக ஒரு விவாதம் நடந்தது.
இந்த நிலையில்தான் தமிழக முதல்வரிடம் இருந்து சட்டமன்றத் தேர்தல் பற்றி சுனில் அரோராவுக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் வேண்டுகோளை அமித் ஷாவும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியிருக்கிறார்.
பொதுவாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாக தமிழகத்தில் அதிமுகவையும், அமமுகவையும் இணைத்துவிட வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் அமித் ஷாவால் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில்தான்… டிடிவி தினகரன் சமீப காலமாகவே பாஜக அரசையோ, தமிழக அரசையோ மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்குவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிட்டார். சசிகலாவின் விடுதலை, அமமுக-அதிமுக இணைப்பு ஆகியவை கிட்டத்தட்ட ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோள் பற்றி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
�,