தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்க 193 துணை மின் நிலையங்களை அமைக்கத் திட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 12) நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், “மழை மற்றும் புயல் காலத்தின் போது வேதாரண்யம் பகுதியில் மின் தடை ஏற்பட்டால் அதைச் சீர் செய்ய நீண்ட நேரம் ஆகிறது. எனவே தலைஞாயிறு பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்துத் தரவேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கக் கடந்த ஆண்டு 216 துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி 193 துணை மின்நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுத் திட்ட மதிப்பீடுகள் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மீதமுள்ள 23 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் பணிகள் நடந்து வருகிறது.
தலைஞாயிறு பேரூராட்சியில் இந்த ஆண்டு துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
அதுபோன்று வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ சென்னையில் 12 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரியிலும் இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். அதன்பின் மின் விநியோகம் சீராகும்” என்று கூறினார்.
**-பிரியா**