இலங்கை அரசியலை கலக்கும் ரஜினி

Published On:

| By admin

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்ற நிலையில் இன்று (மே 14) அவர் அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ரணில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் என்ற போதும் அமைச்சரவையில் இணைக்கப்பட்ட நான்கு பேரும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். மாறாக ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளியுறவுத்துறை அமைச்சராக பெரிஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சனா விஜி சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சியைச் சேர்ந்த இந்த அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் செயல்படுவார்கள்.

“மக்கள் மீது உள்ள வெறுப்பை திசைதிருப்புவதற்காக ராஜபக்சேவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஆக்கியிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே‌. இருவருக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்காது” என்று கூறும் இலங்கை அரசியல் பார்வையாளர்கள் இந்த அரசியல் நிகழ்வை ரஜினிகாந்த் நடித்த சிவாஜி பட காட்சி ஒன்றோடு ஒப்பிட்டு சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சிவாஜி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மொட்டைத் தலையோடு வரும் ரஜினி… ‘சிவாஜியும் நான்தான் எம்ஜிஆரும் நான்தான். நீ போட்ட திட்டப்படி சிவாஜியா செத்து, நான் போட்ட திட்டப்படி எம்ஜிஆரா வந்துட்டேன்’ என்று சொல்லிச் சிரிப்பார். இந்த காட்சியை எடுத்து, ‘ரணிலும் நான்தான் ராஜபக்சேவும் நான்தான்’ என்ற வசனத்தை பொருத்தி இலங்கை அரசியல் வட்டாரத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment