தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் விவாதத்தில் கொங்கு மண்டலமும் இணைந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது.
தென்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வேலைவாய்ப்பு பெருகவும் மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு குரலெழுப்பினர். ஆனால், திருச்சியைத்தான் எம்.ஜி.ஆர் தலைநகராக்க விரும்பினார், அதனால் திருச்சியைத் தலைநகராக்க வேண்டுமென அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அம்மாவட்ட அதிமுகவினரும், திருநாவுக்கரசர், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் இரண்டாவது தலைநகர் அமைய வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களிடம் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “பெருந்துறைக்கு வர வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையும், கோவைக்கு வர வேண்டிய உயர் நீதிமன்றக் கிளையும் மதுரைக்குச் சென்றுவிட்டது. கொங்கு மண்டல மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் அதுபற்றி யாரும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதனால், தமிழகத்தின் இரண்டாவது நிர்வாக தலைநகரம் கொங்கு மண்டலத்தில்தான் உருவாக்கப்பட வேண்டுமெனவும், கோவைக்கும் ஈரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அது அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஈஸ்வரன், “எதுவுமே செய்யவில்லை என்றாலும்கூட கொங்கு பகுதி வாக்குகள் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்கிற அபரிமிதமான நம்பிக்கையை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். அதற்கான பதில் மக்களவைத் தேர்தலில் கிடைத்துவிட்டது. இப்படிப் புறக்கணித்தார்கள் என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பதில் கிடைக்கும்” என்றும் சாடினார்.
மதுரை தலைநகரானால் தொழில் வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்களே என்ற கேள்விக்கு, “தென்மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன. கொங்குப் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. வேலை தேடி வருபவர்களில் பெரும்பாலானோர் கொங்கு மண்டலத்துக்குத்தான் வருகிறார்கள்” என்று பதிலளித்தார் ஈஸ்வரன்.
**எழில்**�,