தடுப்பூசி விவகாரத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (ஜூன் 3) தமிழக வெளிநாடு வாழ் தமிழர் துறைக்கு முதன் முதலாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரான செஞ்சி மஸ்தானை… செஞ்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரஃபிக் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில்
“கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் விடுமுறையில் வந்த வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்கு அவர்களின் பணி பாதுகாப்பை கருதி சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு அனுமதி மூலம் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான கால இடைவெளியை 12 வாரத்திலிருந்து குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளதைப் போன்று 4-6 வார குறுகிய கால இடைவெளியில் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களை வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகள் அனுமதிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, கேரள அரசு வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதல்களை போன்று தமிழக அரசும் வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களுக்காக விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மேலும், இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திய பிறகு, அவர்களுக்கு பாஸ்போர்ட் எண்ணுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும்
வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரிந்து கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து விதமான நிவாரண உதவித் திட்டங்களையும் நீட்டிக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் வேலை செய்யும் வெளிநாடுகளில் அவர்கள் உயிரிழந்தாலும் அவர்களும் தமிழகத்தை சேர்ந்த பெற்றோர்கள் என்ற அடிப்படையில் தமிழக அரசின் இந்த நிவாரண உதவி திட்டத்தை அவர்களின் குழந்தைகளுக்கும் நீட்டிப்புச் செய்ய வேண்டும்”என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், “ கொரோனா பரவலைத் தடுக்க அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தமிழக அரசு பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், முஅத்தீன்கள் மற்றும் பள்ளிவாசலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.
செஞ்சி தருவாரா செஞ்சி மஸ்தான்?
**-வேந்தன்**
�,