மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
”கடந்த ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் ரஜினி பேசிய பேச்சுதான் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தை பத்து நாட்கள் கழித்தும் இன்னும் சூடாக வைத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய மத்திய அரசின் பார்வை மாறியுள்ள நிலையில் அதுபற்றியெல்லாம் வரும் செய்திகளை பின்னுக்கு தள்ளி விட்டு ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சைதான் இன்னமும் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வரிசையாக நேற்று முன்தினமும், நேற்றும் ரஜினிகாந்தை எதிர்த்தும் அவருக்கு வேண்டுகோள் விடுத்தும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ரஜினிகாந்த் மீது திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்புகள் பெரியார் மீது அவதூறு பரப்புவதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத தமிழக போலீசார் புகார்களுக்கு எல்லாம் ரசீதுகளை மட்டும் கொடுத்து அனுப்பி வருகின்றனர்.
போலீசாரின் வழக்கமான இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதுதான் தமிழக அரசு நீதிமன்றத்தில் என்ன பதில் சொல்கிறது என்று தெரியவரும்.
இதற்கிடையில் அதிமுக சார்பில் ஊடகங்களை சந்தித்துவரும் அமைச்சர்கள் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெரியார் பற்றி பேசும் போது எச்சரிக்கையாக பேச வேண்டும், ரஜினிகாந்த் வாயை அடக்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை எதிர்நிலையில் வைத்து கருத்துக்களை தெரிவித்தார். அதேநேரம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ‘ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை கள்ளங்கபடம் இல்லாமல் பேசக்கூடியவர்’ என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். மேலும் ரஜினியை தமிழ்நாட்டின் மருமகன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனது தமிழ்நாட்டில் அதிசயம், அற்புதம் என்று ரஜினிகாந்த் பேசி இருந்த நிலையில், ‘அவர் எல்லாம் ஒரு தலைவரா? அவருக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ என்று ரஜினியை நேரடியாக தாக்கினார் தமிழக முதல்வர்.
அப்போது ரஜினிக்கும் அதிமுகவுக்கும் இடையே ஏற்பட்ட சிறு சிறு உரசல்கள் ஓய்ந்த நிலையில்… பெரியாரை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த சர்ச்சையில் அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ரஜினி சர்ச்சை பற்றி தொலைக்காட்சிகள் நடத்தும் விவாதங்களில் அதிமுக செய்தி தொடர்பாளர்களை அழைத்தால் போகவேண்டாம் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சிப் பத்திரிகையான நமது அம்மாவிலும் ரஜினியை கடுமையாக தாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நடவடிக்கைக்கு உரியவராக ரஜினிகாந்த் பார்க்கப்பட்டாலும் அவர் பேசிய விஷயம் பெரியார் -ராமர் என்பதால், பாஜக ரஜினிக்குப் பகிரங்க ஆதரவு தந்து கொண்டிருப்பதால் இந்த விஷயத்தை நீக்கு போக்காக கையாள வேண்டும் என்று கருதுகிறார் எடப்பாடி. இதனால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் பேரில் செயல்படுவோம், நீதிமன்ற உத்தரவின் பெயரில் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது என்று இருக்கட்டும் மற்றபடி கட்சி ரீதியாக அரசியல் ரீதியாக ரஜினியை இப்போது எதுவும் தாக்க வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு முதல்வரிடமிருந்து தகவல் சென்றிருக்கிறது. ஆனால் ஒரு சில அமைச்சர்கள் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் முதல்வர் பேச்சை கேட்கவில்லை என்பதே அதிமுகவின் தற்போதைய நிலைமை” என்ற மெசேஜ் சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அப்�,