புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஒருமுறை ஐந்தாண்டுக் காலம் முழுமையாக ஆட்சி செய்திருக்கிறார். 2016ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்றதிலிருந்து அந்த ஆட்சிக்கு பலவித நெருக்கடிகளை பாஜக கொடுத்துவந்தது என்பது குற்றச்சாட்டு. இதனால் புதுவை மக்களுக்கு எந்தவித நல்லதையும் செய்ய முடியவில்லை என்று முதலமைச்சராக இருந்த நாராயணசாமி பகிரங்கமாகவே குற்றம்சாட்டியுள்ளார்.
நாராயணசாமி முதலமைச்சர் ஆனதும் பாரதிய ஜனதா கட்சியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துவிட்டது. பாஜக தலைவர்கள் புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் ரங்கசாமி அவர்களை வரவேற்பார். அவர்களின் மேடையிலும் ஏறுவார். தொடர்ந்து நெருக்கமாக இருந்துவந்தார்கள்.
பாரதிய ஜனதா கட்சித் தலைமையானது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைந்தால், நீங்கள்தான் முதலமைச்சர் என்று ரங்கசாமிக்கு வாக்குறுதி அளித்தார்கள். அவரும் அதை நம்பி, பாஜகவுடன் வரும் தேர்தலில் கூட்டணி என பெரும் கனவோடு இருந்துவந்தார்.
இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, பாஜக தரப்பில் வேறு ஒரு திட்டத்தையும் தொடங்கினார்கள். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பது என்பதே அது. மூத்த அமைச்சரான நமச்சிவாயத்தை பாஜக பக்கம் இழுத்தார்கள். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நமச்சிவாயம் தன்னை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என உத்தரவாதம் கேட்டார். பாஜக தரப்பிலும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அந்த வாக்குறுதியை நம்பித்தான் அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் அமைச்சர் பதவியையும் தூக்கியெறிந்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ஒவ்வொருவராக விலகவைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தார். இப்படி பாஜகவில் நமச்சிவாயம் கை ஓங்கிவருவதைக் கண்டு ரங்கசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தன்னுடைய முதலமைச்சர் கனவு நிறைவேறுமா என அவர் தயங்கினார். இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் நியமன எம்.எல்.ஏ. பதவியும் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக மேலிடம், ஏழு அல்லது எட்டு இடங்கள்தான் தரமுடியும் எனக் கூறிவிட்டது.
அமைதியான ரங்கசாமி தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் தொழில் அதிபர்களிடமும் ஆலோசனை செய்தார். அதில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே மேல் என பலரும் கூறியுள்ளனர். பாஜகவுக்கு புதுவையில் ஆதரவு இல்லை; நாராயணசாமி மீதும் புதுவையில் அதிருப்தி இருக்கிறது; பாஜக தரப்பு அவருடைய ஆட்சியைக் கவிழ்த்ததையும் மக்கள் விரும்பவில்லை; எனவே தனியாகப் போட்டியிட்டால் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம் என ரங்கசாமிக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள்.
அப்படி போட்டியிட்டால் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் அலசியிருக்கிறார்கள். ராஜ்பவன், தட்டாஞ்சாவடி, கதிர்காமம் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியைப் போட்டியிடவைத்து வெற்றிபெற வைக்க மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவாதம் தந்திருக்கிறார். மாகி தொகுதியில் அமைச்சராக இருந்த வல்சரான் காங்கிரஸ் சார்பில் இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடத் தயார் என்று கூறியிருக்கிறார். இப்படி 10 தொகுதிகள் வரை என்.ஆர்.காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறலாம் என ரங்கசாமிக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.
இதை மோப்பம்பிடித்த பாஜக சார்பில், மேலிடப் பொறுப்பாளர்களான நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் இருவரும் நேற்று இரவு ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர். அப்போது ரங்கசாமி தங்களுக்கு 17 இடங்களுக்குக் குறையாமல் தர வேண்டும்; மாநிலங்களவை இடம் ஒன்றும் வேண்டும் என உறுதியாக நின்றிருக்கிறார். அதன்பிறகும் அவர்கள் எட்டு இடங்களில் நில்லுங்கள்; தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்பதை பாஜக தலைமை முடிவுசெய்யும்; உங்களுக்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் செய்வார்கள் என கூறியிருக்கின்றனர்.
அதை ஒப்புக்கொள்ள முடியாது என ரங்கசாமி அந்த இடத்திலேயே கூறிவிட்டார்.
மீண்டும் அதை பாஜக தரப்பினர் வலியுறுத்த, ”நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். எங்கள் கட்சிக்காரர்களைக்கூட இழுத்துக்கொள்ளுங்கள்; ரெய்டு செய்தாலும் செய்யுங்கள்” என சிரித்தபடியே சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்.
தேர்தலுக்கு செலவு செய்வதற்காக ரங்கசாமி நிலம், சில வீடுகள் போன்ற சொத்துகளை விற்று தயாராக இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரின் முடிவை அடுத்து, பாஜக தரப்பில் சில முக்கிய நிர்வாகிகள் நேற்று (மார்ச் 4) திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ரங்கசாமி வராவிட்டால் அதிமுகவுக்கு 12 இடங்கள் தந்துவிட்டு, பாஜக 18 தொகுதிகளை எடுத்துக்கொள்ளவும் அதில் பாமகவுக்கு சில தொகுதிகளைத் தருவது என்றும் பேசப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரங்கசாமி தன் முடிவை எடுப்பதற்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார், அங்கிருந்து புதுவை திரும்பியதும் இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுடனும் கலந்துபேசுவார் என்று அவரின் அணுக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர, ரங்கசாமியின் ஆட்சியால் பலன்பெற்ற சில தொழிலதிபர்கள் அவருக்கு உதவிசெய்யத் தயாராக இருப்பதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
**- வணங்காமுடி**
�,