பெட்ரோல் டீசல் விலை: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

Published On:

| By admin

தேர்தலுக்கு முன்னதாக திமுக கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் ஏன் குறைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில்கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. வரியைக் குறைக்க மாநில அரசையும் வலியுறுத்தியது.
இந்த நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதற்கு நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பதிலளித்தனர்.
முதல்வர் பேசுகையில், முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோடி பேசியிருக்கிறார் என்றார்.
இந்த நிலையில் முதல்வருக்குப் பதிலளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ. 5& ரூ.4 குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திமுக அரசு 355 நாட்களாகியும் அதை நிறைவேற்றவில்லை.
ஆனால், எந்த வாக்குறுதியும் அளிக்காமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே ரூ.10, ரூ.4 என்ற அளவில் மத்திய அரசு குறைத்தது. போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற 3 கோடி ரூபாய் செலவழித்த முதல்வர், தேர்தலுக்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை, போருக்குப் பிறகுதான் அதிகரித்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கச்சா எண்ணெயின் விலை கடந்த ஜனவரியில் 72.93 டாலராக இருந்தது. இந்த ஏப்ரலில் 111.86 டாலராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரூ.91,570 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு சாலை வசதிகள் ரூ.106,480 கோடி மதிப்பிலான புதிய சாலை கட்டுமான பணிகள் அமைக்கத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு, பல திட்டங்கள் முடியும் தறுவாயில் இருக்கின்றன. இதுதவிர 292 விவசாயக் கட்டமைப்புத் திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணம் மத்திய அரசுக்கு எங்கிருந்து வருகிறது. ஒவ்வொரு மாநில அரசின் வரி வருவாய்க்கு ஏற்பத்தானே மத்திய அரசு செலவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ”முதல்வர் தனது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று “ஒரு தமிழனாக நானும் எதிர்பார்க்கிறேன். அதுபோன்று சொன்னதை மறப்பது பிரதமரின் ரத்தத்தில் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share