சிறப்புக் கட்டுரை: தமிழிசையை நாஞ்சில் சம்பத் பேசுவது சரியா?

politics

b> நா.மணி
விவாதங்கள், விமர்சனங்கள்… தனிநபர்களை காயப்படுத்தாமல் உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டும். விவாதத்துக்கு உட்படுத்தும் பொருளின் மீது விவாதத்தில் ஈடுபடுவோருக்கும் அதைக் கேட்போருக்கும் சந்தேகங்கள் அகல வேண்டும்; தெளிவு பிறக்க வேண்டும். ஆனால், அப்படிப் பல நேரங்களில் நடப்பதில்லை. இதன் சமீபத்திய உதாரணம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை, நாஞ்சில் சம்பத் அவர்கள் ஒருமையில் பேசியது. இதற்கு பதிலளித்துள்ள நாஞ்சில் சம்பத், “ஒருமையில் பேசுவது தமிழ் மரபு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாரதியார் நினைவு நூற்றாண்டு கருத்தரங்கின் மேடையைத் தமிழிசை சௌந்தரராஜன் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அதிகாரத்தை மீறியுள்ளார். கருத்துரிமை மீது அறிவிக்கப்படாத போரைத் தொடங்கியுள்ளார். ஆளுநர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆண்டவனும் விமர்சனத்துக்கு உட்பட்டவரே” – இதுவே அவரது பதிலின் சாரம். “என்னைக் கூறு கூறாக வெட்டிப் போட்டாலும் மன்னிப்புக் கோர மாட்டேன்” என்ற அவரது சொற்கள் உணர்ச்சியின்பாற்பட்டது. அதைப் புறந்தள்ளிவிட்டு அவரது பதிலை மட்டும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தலாம்.
தமிழ் பண்பாட்டு மரபில் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தாத்தா, பாட்டி எனப் பல ரத்த உறவு முறைகளில் ஒருமையில் அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அது உரிமை அடிப்படையிலான ஒருமை என்று கொள்ளலாம். அதேபோல் தமிழ் இலக்கிய மரபிலும் நாஞ்சில் சம்பத் குறிப்பிடுவதைப் போல இறைவனை ஒருமையில் அழைக்கும் பழக்கமும் வழக்கத்தில் இருக்கிறது. இது எல்லோரும் அறிந்ததே. ஆனால், கருத்தியல் ரீதியில் விமர்சனத்தை முன்வைக்கும்போது, எவ்வளவு கடுமையான விமர்சனத்தை முன்வைப்பதாக இருந்தாலும் கண்ணியத்தோடு முன்வைப்பதே போற்றத்தக்கது. அத்தகைய விமர்சனங்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். கூடுதல் மதிப்பும் ஏற்படும். விமர்சனம் எதைப் பற்றியது, எவ்வளவு ஆழமானது, எவ்வளவு அறிவார்ந்தது என்பதைக் காட்டிலும், அந்த விமர்சனத்தை முன்வைக்கும் முறை மிகவும் முக்கியமானது. இதில் வரம்பு மீறும்போது விமர்சனத்தின் உள்ளடக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, விமர்சனத்தை முன்வைத்த முறை‌ முன்னுக்கு வந்துவிடுகிறது. விமர்சனத்தில் என்ன உண்மை இருந்தாலும் விமர்சனப் பாங்கு மாறும்போது விமர்சனம் செய்பவர்கள் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாமல் போகிறது. எந்த காரணத்துக்காக விமர்சனம் செய்தாரோ, அதுவும் யாருடைய நெஞ்சிலும் நிற்காமல் போகிறது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது தமிழிசை சௌந்தரராஜன் மீது நாஞ்சில் சம்பத் வைத்து விமர்சனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒருமையில் பேசியது மட்டுமே எல்லோர் முன்னும் எழுந்து நிற்கிறது.
இப்போது நாஞ்சில் சம்பத் கூறியது போல், “தன்னை ஒருமையில் பேசியதற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேடையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது” என்ற வாதத்தை முதலில் எடுத்துக்கொள்வோம். மேலோட்டமாக பார்த்தால் இந்த வாதத்தில் உண்மை இருப்பது போல் தெரியும். பலரும் இதனை ஒப்புக்கொள்ளலாம்.
“பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவில் எதற்கு இந்தப் பேச்சு?” என்ற கேள்வி இயல்பில் சரியாகத் தோன்றலாம். ஆனால், இது தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு இந்த அடிப்படை உண்மைகூட தெரியாதா… அப்படித் தெரிந்திருந்தால் ஏன் அவ்வாறு பேசினார் என்று இரண்டு கேள்விகள் எழுகின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருக்கிறார். எந்தக் கட்சியாக இருந்தாலும் இதுவே ஓர் ஆணாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொண்டாப்பட்டு இருப்பார் என்று ஆதங்கம் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இருக்கலாம். அந்த ஆதங்கம் தவறு என்று கூற இயலாது.
அடுத்து, தானே ஓர் ஆணாக இருந்தால் இப்படி தொடர்ச்சியாக ஒருமையில் பேசுவாரா என்று சந்தேகமும் அவருக்கு எழுகிறது. இத்தகைய சந்தேகத்தையும் தவறு என்று சொல்ல முடியாது. ஆக, தன் மீதான ஒருமை விழிப்புக்கு காரணம் பாலின சமத்துவம் இன்மை என்பதே மையம். பெண் என்பதால் தனக்கு இயல்பாகக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனப்புழுக்கம் அவருக்கு இருந்திருக்கலாம். தான் ஒருமையில் விளிக்கப்படுவது பற்றி ஊடகங்கள்கூட கவனம் செலுத்தவில்லை; அதைப் பொதுவெளியில் பேசு பொருளாக மாற்ற வில்லை என்ற ஆதங்கம் கூட இருந்திருக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் வடிகாலாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேடையை அவர் பயன்படுத்தியிருக்கலாம். தமிழை மாசறக் கற்றவர்கள்கூட ஏன் தமிழ் மரபைக் காக்கவில்லை? தமிழின் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேறி இருந்தாலும் தமிழ் மரபை ஏன் பின்பற்றவில்லை? இதை இங்கு தான் சுட்டிக்காட்ட தக்க இடம் என்று அவர் கருதியிருக்கலாம். இரண்டாவதாக தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் இளைஞர்கள், தமிழ் சான்றோர்கள் இருக்கும் இடத்தில் இதை முன்வைத்ததன் மூலம், பங்கேற்பாளர்கள் சிந்தனைக்கும் கொண்டு செல்ல முடியும். இந்தப் பிரச்சினை சென்று சேர வேண்டிய இடம்கூட இவர்கள் மத்தியில் என்றும் கருதியிருக்கலாம். இறுதியாக தனக்குக் கிடைக்காத அங்கீகாரம், தனக்குக் கிடைக்காத பாலின சமத்துவம் ஆகிய விஷயங்கள் பொது தளத்துக்கு வர வேண்டும் என்றும் அவர் எண்ணி இருக்கலாம்.
இந்த நோக்கில் பார்த்தால் அவரது பார்வை தவறென்று கூறுவது கடினம். தனக்கு ஒரு பாதகம் நிகழ்கிறது. அது யார் மனதையும் தொடாமல் இருக்கிறது. யார் கண்ணிலும் படாமல் இருக்கிறது. தன் உள்ளக்கொதிப்பின் மீது ஒரு குவிமையத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேடையைப் பயன்படுத்துகிறார். அவர் நினைத்தது சாத்தியமாகிறது. ஆனால், பாலின சமத்துவம் இன்மையால் இப்படிப் பேசுகிறார் என்பது இன்னும் வெளிவரவில்லை. அது வெளிவர வேண்டும். தன்னை விமர்சனம் செய்யக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லை.
அழகு தமிழில் மரபு மாறாமல் விமர்சனம் செய்யுங்கள் என்கிறார். தன் முன் உள்ள பார்வையாளர்களும் அத்தகைய விமர்சனப் பாங்கை கைக்கொள்ள வேண்டும் எதிர்காலத்தில், என்பதும் அவரது நோக்கமாக இருக்கலாம். பாலின சமத்துவம் தொடர்பாக தொடர்ந்து வரும் போராட்டத்தில் இது ஒரு பகுதி. இதை அரசியல்மாச்சரியங்களைக் கொண்டு அளவிடக் கூடாது.
பராசக்தியையே “சொல்லடி” என்று தான் நான் அழைப்பேன். என் தந்தையையே அப்பன் என்று தான் அழகுறக் கூறுவேன். அம்மாவைக் கூட தாய்க் கிழவி என்று சொல்லலாம். அது ஆதீத உரிமையின் உச்சம். அங்கு விளிப்பு மொழியைக் காட்டிலும் அன்பையும் அலாதியான உரிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதையும் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் அழைத்தமைக்கும் ஒப்புமைப்படுத்த இயலாது. கூடாது. ஒருவேளை அப்படி அழைக்கலாம் என்று வாதாடினால், தான் சார்ந்திருக்கும் கட்சியின் உயர்ந்த தலைவர்கள் அல்லது மதிப்புமிக்க தலைவர்களையே அப்படி அவர் அழைக்க வேண்டும். எனவே, அது தவறான ஒப்புமை.
இருவரும் ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள். சமகால அரசியல்வாதிகள். அரசியல் சார்பு நிலைகள் வேறு வேறாக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள் கூட இப்படி ஒருமையில் விளிக்கத் தூண்டி இருக்கலாம். சொல்லிவிட்ட ஒரே காரணத்துக்காக அதற்கு நியாயம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு நாஞ்சில் சம்பத் சேர்த்து வைத்துள்ள சொற்களும் அறிவும் பயன்படலாம். இருப்பினும் ஒரு மாநில ஆளுநர் என்ற முறையில் மட்டுமல்ல; ஓர் அரசியல் தலைவர் என்ற முறையிலும் ஒருமையில் பேசுவது தவறே. அந்த ஒருமை அவர் பெண் என்பதால் வந்திருந்தால் அது மிக மிகத் தவறு. எனக்கு மட்டுமே தெரியும் என்ற எண்ணம் யாருக்கும் பலனின்றியே முடியும். அறிவை பறைசாற்றி அடுத்தவரை மட்டம் தட்டுதல் கூடாது. சட்டாம்பிள்ளைத் தனம் தவறு. பரிகாசம் நல்ல பண்புடைய செயல் அல்ல. எப்போதும் எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவாகப் பேசுதல் நன்றல்ல. இது தமிழிசை சௌந்தரராஜன், நாஞ்சில் சம்பத் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**

**பேராசிரியர் நா. மணி, **தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறைத் தலைவர் . தொடர்பு மின்னஞ்சல்: tnsfnmani@gmail.com

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.