நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் செயலைக் கண்டித்து இன்று காலை விழுப்புரத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஐந்து மாதத்திற்கு பிறகு அந்த மசோதாவை திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர். என்.ரவி. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் குரல் கொடுத்து வருகிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள்.
இதுதொடர்பாக இன்று தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் கூட்டினார். இந்த நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக துணை செயலாளரும், முன்னாள் எம்.எல் ஏ.வுமான புஷ்பராஜ் தனது ஆதரவாளர்களுடன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் அம்பேத்கர் சிலையின் கீழ் இன்று(பிப்ரவரி 5) காலை 7.45 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்தான தகவல் சமூகவலைதளம் மற்றும் செய்திகளில் வெளியானதையடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 9 மணியளவில் புஷ்பராஜ் செல்போனுக்கு அழைத்தார். அமைச்சரிடம் இருந்து போன் வந்தவுடன், புஷ்பராஜ் அருகில் உள்ள பெட்டி கடைக்குள் சென்று பேசினார்.
அப்போது அமைச்சர் பொன்முடி, ‘யாரைக் கேட்டு உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துரா?. உடனே உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிட்டுட்டு போயா’ என்று சத்தம் போட்டுள்ளார். வேர்த்து போன முகத்தைத் துடைத்து கொண்டு வெளியே வந்த புஷ்பராஜ் உண்ணாவிரதம் போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன் என்று தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த புஷ்பராஜ், ”என் மகன் மனோஜ் குமார் பனிரெண்டாம் வகுப்பில் 1127 மார்க் எடுத்தும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், டிஎம்டி யூனிவர்சிட்டியில் சேர்த்து வருடத்திற்கு 25 லட்சம் செலுத்தி படிக்க வைத்து வருகிறேன். என்னாலேயே என் பிள்ளைக்கு இவ்வளவு தொகை செலுத்தி படிக்க வைக்க கஷ்டமாக இருக்கும்போது, மற்ற பெற்றோர்கள் எந்தளவு கஷ்டப்படுவார்கள் என்பதை ஒரு தந்தையாக நினைத்துப் பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், அவரை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடத்தினோம். தற்போது தலைமையின் முடிவுக்கு இணங்கி, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறோம்” என்று கூறினார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ உண்ணாவிரதம் போராட்டத்தை அவசரம் அவசரமாக வாபஸ் பெற்றதால் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது திமுக.
**-வணங்காமுடி**