மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம்!

Published On:

| By Balaji

பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில், மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்த பின் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “ காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 30) பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த தீர்மானத்தில், “காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். புதுவை அரசு சார்பில் ஏற்கனவே பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து 13ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது.

மேகதாதுவில் அணைக் கட்டினால் காரைக்காலுக்கு வரவேண்டிய 7 டிஎம்சி நீர் வராது. எனவே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்று மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share