�திட்டமிட்டபடி நடக்கும் திமுக பேரணி: சென்னையில் குவிந்த அரசியல் கட்சியினர்!

Published On:

| By Balaji

சென்னையில் நடைபெறும் திமுக பேரணியை வீடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று (டிசம்பர் 23) சென்னையில் மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவினரும் பல்வேறு கட்சிகளை, அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சென்னையில் நேற்றிரவு முதலே குவியத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் திமுக நடத்தும் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி இந்திய மக்கள் மன்றத்தின் சார்பில் வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “திமுக நடத்தும் பேரணியால் பொதுச் சொத்துகளுக்கு சேதமும், அமைதிக்கு குந்தகமும் ஏற்படக்கூடும். பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மனுவில் உள் துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

இந்த மனு அவசர வழக்காக வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு நேற்றிரவு (டிசம்பர் 22) 9.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. எனினும், விசாரணைக்கு திமுக தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை.

திமுகவின் பேரணிக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “மனுத் தாக்கல் செய்த பிறகு திமுக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பாகவே மறுக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், “பேரணிக்கு அனுமதி கேட்டு டிசம்பர் 18ஆம் தேதி திமுக கடிதம் அளித்தது. ஆனால், பேரணிக்கு அனுமதி மறுத்து இன்று உத்தரவு பிறப்பித்தோம். ஏனெனில், சட்ட நகலை எரிப்பீர்களா, உருவ பொம்மையை எரிப்பீர்களா போன்ற கேள்விகளுக்கு திமுக பதிலளிக்கவில்லை. நாங்கள் சொன்ன நிபந்தனைகளுக்கு திமுக தரப்பிலிருந்து பதில் இல்லை. பேரணிக்கு 1,000 பேர் வருகிறார்கள் என்றால் அதனை காவல் துறையால் சமாளிக்க முடியும். ஆனால், மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. போராட்டத்துக்கு வருபவர்கள் விதியை மீறி செயல்பட ஆரம்பித்தால் அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும்” என்று விளக்கம் அளித்தார்.

இதைக் கேட்ட பின், “ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது. ஆனால், வன்முறை இருக்கக் கூடாது. போராட்டத்தின்போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்சிகளின் கடமை” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,

“காவல் துறை சொன்ன நிபந்தனைகளை திமுக ஏற்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? நாங்கள் இடைக்கால உத்தரவு மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுகவின் பேரணிக்கு அனுமதிப்பதாக இருந்தால், ஆர்ப்பாட்டத்தை முறையாகப் படப்பிடிப்பு செய்து விதிமீறல் ஏற்படாமல் உள்ளதா என கண்காணிக்க முடியுமா? அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “திமுக பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். பேரணியின்போது காவல் துறை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் இரு மடங்காக வசூல் செய்ய வேண்டும். நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் எட்டு வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

உத்தரவு வெளியான சிறிது நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பேரணியை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியிலிருந்து சிலரின் பெயரைப் பயன்படுத்தி, நீதிபதிகளின் இல்லத்துக்குச் சென்று முறையிட்டனர். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதைப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அண்ணா வழியில் பேரணியை நடத்தவுள்ளோம். ஆளுங்கட்சி எங்களுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைப் பெற்றுத் தந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இன்று காலை சென்னை எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகையில் ஆரம்பித்து புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் அரங்கம் வரை பேரணி நடைபெறுகிறது. பேரணி நடத்தலாம் என்று உத்தரவிட்ட நிலையில், நேற்றிரவு முதல் பேருந்துகளில், கார்களில் அரசியல் கட்சியினர் சென்னையில் குவிந்துள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share