உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோன்று பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்ட வாக்குப் பதிவில் 17,230 காவல்துறையினர் மற்றும் 3,405 ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் போது 16,006 காவல் துறையினரும், 2,867 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ஆம் தேதி அன்றும், தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக் கூடம் மற்றும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியிலும் மதுபானங்கள் விற்பனை செய்வதோ மது கூடத்தைத் திறப்பதோ அல்லது எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19 மிலாடி நபி ஆகிய இரண்டும் நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
**-பிரியா**
�,